வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2026 மாச்சு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தமை மற்றும் பணிகள் மிகை மிதமடைந்தமை போன்றவற்றிற்கு மத்தியிலும், உயர்வடைந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் குறைவான முதலாந்தர வருமானப் பற்றாக்குறை போன்றவற்றினால் முக்கியமாக ஆதரவளிக்கப்பட்டு, வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 மாச்சில் சிறிதளவு மிகையொன்றைப் பதிவுசெய்தது. ஒன்றுசேர்ந்த நடைமுறைக் கணக்கு மிகையானது 2026இன் முதலாம் காலாண்டில் ஐ.அ.டொலர் 531 மில்லியனைப் பதிவுசெய்தது. 

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2026 மாச்சில் விரிவடைந்து, ஏற்றுமதிகளை விடவும் இறக்குமதிகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியினைப் பிரதிபலித்தது. 2026இன் முதலாம் காலாண்டில், வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025இன் தொடர்புடைய காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 1.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 2.3 பில்லியன் தொகைக்கு விரிவடைந்தது.  

மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் ஏற்பட்ட எரிபொருள் விலைகளிலும் அளவுகளிலும் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக எரிபொருள் இறக்குமதிகள் மீதான செலவினமானது 2026 மாச்சில் ஐ.அ.டொலர் 630 மில்லியனிற்கு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 74.7 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது.

தனியாள் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக வாகன இறக்குமதிகள் 2026 மாச்சில் ஐ.அ.டொலர் 195 மில்லியனாக விளங்கி, 2026இன் முதலாம் காலாண்டில் மொத்த வாகன இறக்குமதிகளை ஐ.அ.டொலர் 613 மில்லியனிற்குக் கொண்டுசென்றுள்ளது.  

ஏற்றுமதி விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இறக்குமதி விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வர்த்தக மாற்று விகிதமானது 2026 மாச்சில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் தேய்வடைந்து காணப்பட்டது. அதேவேளை, 2026இன் முதலாம் காலாண்டில், வர்த்தக மாற்று விகிதமானது முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு தேய்வடைந்து காணப்பட்டது. 

முக்கியமாக சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட குறைவின் காரணமாக பணிகள் கணக்கில் ஏற்பட்ட மிகையானது 2026 மாச்சில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 42.4 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 227 மில்லியனிற்கு சடுதியாக வீழ்ச்சியடைந்தது. ஒன்றுசேர்ந்த மிகையும் 2026இன் முதலாம் காலாண்டில் 2025இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20.2 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. 

மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தின் காரணமாக, 2026 மாச்சில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 19.8 சதவீதம் கொண்ட சடுதியான சுருக்கமொன்றைப் பிரதிபலித்து, 183,979இற்கு வீழ்ச்சியடைந்ததோடு, அண்மைய மாதங்களில் அவதானிக்கப்பட்ட நிலையான வளர்ச்சி உத்வேகத்தை மாற்றியுள்ளது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள்   2026 மாச்சில் ஐ.அ.டொலர் 224 மில்லியன் தொகையாக மதிப்பிடப்பட்ட அதேவேளை ஒன்றுசேர்ந்த வருவாய்கள் 2026இன் முதலாம் காலாண்டில் ஐ.அ.டொலர் 954 மில்லியன் தொகைக்கு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 15.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. 

2026 மாச்சில், தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 815 மில்லியனிற்கு அதிகரித்து, 17.5 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தன. ஒட்டுமொத்தமாக, ஆண்டின் முதலாம் காலாண்டில் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 26.5 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன.

அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஐ.அ.டொலர் 64 மில்லியன் தொகையிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றைப் பதிவுசெய்த வேளையில், முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2026 மாச்சு மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 10 மில்லியன் தொகையிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன. 

சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள், 2026 மாச்சு இறுதியில் ஐ.அ.டொலர் 7.0 பில்லியனாகக் காணப்பட்டன. இவ் வீழ்ச்சிக்கு மத்திய வங்கி மூலமான தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளுக்கு மத்தியிலும், முக்கியமாக வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் காரணமாயமைந்தன.  

2026 பெப்புருவரியின் பிற்பகுதியில் மத்திய கிழக்கு யுத்தத்தின் ஆரம்பத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டுத் துறை அழுத்தங்களுக்கு மத்தியில், 2026 ஏப்பிறல் இறுதியுள்ளவாறு, ஐ.அ.டொலரிற்கெதிராக இலங்கை ரூபா ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 2.9 சதவீதத்தினால் தேய்வடைந்தது.  

PDF

Published Date: 

Thursday, April 30, 2026