கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, 2026 மாச்சில் 57.1 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்தை விட மெதுவான வேகத்திலேனும் கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. பிரதானமாக, எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களின் வரையறுக்கப்பட்ட கிடைப்பனவு, அதிகரிக்கின்ற செலவுகள் மற்றும் மத்திய கிழக்கு மோதலிலிருந்து ஏற்படுகின்ற ஏற்பாட்டுச்சேவை முட்டுக்கட்டைகள் போன்றவற்றின் காரணமாக சவால்மிக்க தொழிற்பாட்டுச் சூழலொன்றை பல பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டனர்.
கருத்திட்டப் பாய்ச்சல்கள் வலுவடைந்து காணப்பட்டதாக அநேகமான பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டதன் மூலம் புதிய கட்டளைகள் சுட்டெண் மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் விரிவடைந்தது. தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண் மாச்சில் மேலும் அதிகரித்து, நிலவுகின்ற நிச்சயமற்றதன்மைகளுக்கு மத்தியிலும் நிறுவனங்கள் திட்டமிட்ட ஆட்சேர்ப்பினையும் பெறுகையினையும் தொடர்ந்ததை எடுத்துக்காட்டுகின்றது. விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அநேகமான நிறுவனங்கள் இருப்புக்களை கட்டியெழுப்புவதற்கு முயன்றதாகவும் அதேவேளை விநியோகஸ்தர்கள் பொருட்களை நிறுத்துவதற்கு முனைந்ததாகவும் பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவில் நீட்சியடைந்து, பிரதானமாக போக்குவரத்துடன் தொடர்புபட்ட தாமதங்களைப் பிரதிபலிக்கின்றது.
அடுத்த காலாண்டில் கட்டுமான நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் இடம்பெற்றுவரும் மத்திய கிழக்கு மோதலலைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மைகளினால் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டதனூடாக கருத்திட்டங்களின் நிலையான முன்னெடுப்பினால் துணையளிக்கப்பட்டு, நடுத்தர அடிப்படைஅளவுக்கு மேல் காணப்படுகின்றன.








