2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 99(2) மற்றும் 7(1)(1) ஆம் பிரிவின் கீழான தேவைப்பாடான 2025ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் எனும் வெளியீடு அதிமேதகு சனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி நந்தலால் வீரசிங்க அவர்களினால் இன்று அதாவது, 2026 ஏப்பிறல் 20 அன்று கையளிக்கப்பட்டது.
உள்ளடக்கம் பற்றிய குறிப்பு:
இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் - 2025 வெளியீடானது 2025ஆம் ஆண்டுகாலப்பகுதியில் மத்திய வங்கியின் நிறுவனசார் செயலாற்றம் பற்றிய கண்ணோட்டமொன்றை வழங்குகின்றது. இவ்வெளியீடு மூன்று முக்கிய கூறுகளாக அதாவது தொழிற்பாட்டு நுண்நோக்குகள், நிதியியல் கூற்றுக்கள் மற்றும் துணைத் தகவல்கள் என கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய வங்கியின் முக்கிய தொழிற்பாடுகளின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் விசேட குறிப்புக்களையும் இது உள்ளடக்குகின்றது.
தொழிற்பாட்டு நுண்நோக்கானது உள்நாட்டு விலை உறுதிப்பாட்டைப் பேணுதல், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிசெய்தல், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளை மேற்பார்வை செய்தல், நாணயத் தொழிற்பாடுகளை முகாமைசெய்தல், வங்கியின் பன்னாட்டு ஈடுபாடுகளை கையாளுதல், முகவராண்மைத் தொழிற்பாடுகள் உள்ளிட்ட ஒப்படைக்கப்பட்ட ஏனைய பொறுப்புக்களை கொண்டுநடாத்துதல் அத்துடன் உள்ளகத் தொழிற்பாடுகளை முகாமைசெய்தல் என்பன உள்ளடங்கலாக மத்திய வங்கியின் உபாயம் மற்றும் அதன் முக்கிய பொறுப்புக்கள் பற்றி எடுத்துரைக்கின்றது.
நிதியியல் கூற்றுக்கள் பிரிவானது 2025 திசெம்பர் 31 முடிவுற்ற ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் பன்னாட்டு நிதி அறிக்கையிடல் நியமத்துடன் இணங்கும் நிதியியல் கூற்றுக்களை கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் சுயாதீன அறிக்கையுடன் சேர்த்து எடுத்துரைக்கின்றது. இப்பிரிவு நிதியியல் மீளாய்வொன்றினையும் உள்ளடக்கி, ஆண்டுகாலப்பகுதியில் வங்கியின் நிதியியல் செயலாற்றம் பற்றி பகுப்பாய்வினை வழங்குகின்றது.
துணைத் தகவல்கள் பிரிவானது வங்கியின் பிராந்திய ரீதியான பிரசன்னம், மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகின்ற நிறுவனங்களின் பட்டியல் அத்துடன் நிறுவனத் தகவல் தொகுப்பு என்பன பற்றிய விபரங்களை வழங்குகின்றது.








