வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 பெப்புருவரியில் மிகையொன்றினைப் பதிவுசெய்து, 2025 நவெம்பரிலிருந்து பதிவுசெய்யப்பட்ட போக்கினை விரிவடையச்செய்ததுடன் 2026 சனவரி தொடக்கம் பெப்புருவரி வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 487 மில்லியன் தொகையிலான ஒன்றுசேர்ந்த மிகையொன்றினைப் பதிவுசெய்தது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2026 பெப்புருவரியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் விரிவடைந்தது. மேலும், 2026 சனவரி தொடக்கம் பெப்புருவரி வரையான காலப்பகுதியில், வர்த்தகப் பற்றாக்குறையானது 2025இன் தொடர்புடைய காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 1.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.4 பில்லியன் தொகைக்கு விரிவடைந்தது.
தனியாள் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக வாகன இறக்குமதிகள் 2026 பெப்புருவரியில் ஐ.அ.டொலர் 194 மில்லியனாக விளங்கி, 2026 சனவரி தொடக்கம் பெப்புருவரி வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வாகன இறக்குமதிகளை ஐ.அ.டொலர் 418 மில்லியனிற்குக் கொண்டுசென்றுள்ளது.
ஏற்றுமதி விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இறக்குமதி விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வர்த்தக மாற்று விகிதமானது 2026 பெப்புருவரியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் தேய்வடைந்து காணப்பட்டது. 2026 சனவரி தொடக்கம் பெப்புருவரி வரையான காலப்பகுதியிலும் வர்த்தக மாற்று விகிதமானது முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தேய்வடைந்து காணப்பட்டது.
பணிகள் கணக்கில் ஏற்பட்ட மிகையானது 2026 பெப்புருவரியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 16.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையானது உயர்ந்தளவிலான வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடைய வெளிப்பாய்ச்சல்களுடன் இணைந்து, சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் உள்ளடங்கலாக முக்கிய பணி வகைகளிலிருந்தான குறைந்தளவிலான உட்பாய்ச்சல்களினால் உந்தப்பட்டு பணிகள் கணக்கு மிகையில் வீழ்ச்சியினைப் பிரதிபலித்தது.
2026 பெப்புருவரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மாதாந்த அடிப்படையொன்றில் அதிகரித்த அதேவேளையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 16.3 சதவீத வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2026 பெப்புருவரியில் ஐ.அ.டொலர் 352 மில்லியன் தொகையாக மதிப்பிடப்பட்டதுடன் ஒன்றுசேர்ந்த வருவாய்கள் 2026 சனவரி தொடக்கம் பெப்புருவரி வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 730 மில்லியன் தொகைக்கு 4.9 சதவீத ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன.
அண்மைய மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட நேர்க்கணிய உத்வேகத்தினைத் தொழிலாளர் பணவனுப்பல்கள் 2026 பெப்புருவரியில் நிலைபெறச் செய்தன. ஒட்டுமொத்தமாக, ஆண்டின் முதலாவது இரண்டு மாத காலப்பகுதியில் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 32.0 சதவீத வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன.
அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஐ.அ.டொலர் 53 மில்லியன் தொகையிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த வேளையில், முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2026 பெப்புருவரி மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 30 மில்லியன் தொகையிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.
சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 பெப்புருவரி இறுதியில் ஐ.அ.டொலர் 7.3 பில்லியன் தொகைக்கு அதிகரித்தன. தொடர்ச்சியான வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகளிற்கு மத்தியில் மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட உயர்ந்தளவிலான வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளினால் இது முக்கியமாக உந்தப்பட்டுக் காணப்பட்டது.
2026 மாச்சு இறுதியுள்ளவாறு, ஐ.அ.டொலரிற்கெதிராக இலங்கை ரூபாவின் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலான பெறுமதித்தேய்வானது 1.6 சதவீதமாகக் காணப்பட்டமையானது 2026 பெப்புருவரி மாத பிற்பகுதியில் மத்திய கிழக்கு மோதலின் ஆரம்பத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டுத் துறை அழுத்தங்களின் தோற்றத்தினைப் பிரதிபலித்தது.








