வெளிநாட்டு பாதிக்கப்படக்கூடியத்தன்மைகள் தொடர்பில் கரிசனையொன்று காணப்பட்டபோதிலும், 2025இல் உள்நாட்டு பேரண்ட நிதியியல் நிலைமைகள் மேலும் வலுவடைந்து, தொடர்ச்சியான கொடுகடன் விரிவாக்கத்திற்கு ஆதரவளித்தது. 2025இன் இறுதியளவில் வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் வழங்கிய மொத்த கொடுகடன் அதிகரித்ததனூடாக கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்தது. நிதியியல் துறையின் வெளிப்படுத்துகையானது, வலுவான தனியார் துறைக் கொடுகடன் வளர்ச்சியுடன், தனியார் துறையை நோக்கி மேலும் மாற்றமடைந்தமைக்கு மத்தியில் தற்போதைய இறை ஒருங்கமைப்பினைப் பிரதிபலிக்கின்ற வகையில் பொதுத் துறைக்கான வெளிப்படுத்துகை சிறிதளவில் சுருக்கமடைந்தது. அரசாங்கத்துடன் தொடர்புடைய வெளிப்படுத்துகை வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், அது கணிசமானளவிலேயே காணப்படுகின்றது. வங்கித்தொழில்; துறையினது வைப்புகளுக்கான கொடுகடன் விகிதத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு, நிதியியல் இடையீடு உயர்வடைந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கொடுகடன் இடைவெளி கொடுகடன் சுழற்சி வட்டத்தின் நேர்மறையான புலத்தில் மேலும் விரிவடைந்து, நிதியியல் துறையினுள்; முறைமைசார் இடர்நேர்வினை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட பூகோள அரசியல் மோதல்கள் உள்ளடங்கலான உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள், பண்ட விலைத் தளம்பல்கள் மற்றும் மோசமான வானிலை நிலைமைகள் போன்றன நிதியியல் துறையின் கொடுகடன் தரத்தில் கீழ்நோக்கிய இடர்நேர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இப்பின்னணியில், நிலையான இறைத் திரட்சி மற்றும் வெளிநாட்டுத் துறை தாங்கிருப்புக்களை வலுப்படுத்தல் போன்றன பேரண்ட நிதியியல் உறுதிப்பாட்டை பாதுகாப்பதற்கான இன்றியமையாதவையாக இருக்கும்.








