கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 மேயில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 ஏப்பிறலின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 9.0 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 1.8 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயில் 3.9 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2021 மேயில் 1.05 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள் 2021 மேயில் முறையே 0.69 சதவீதத்தினையும் 0.36 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் உடன் மீன், தேய்காய் எண்ணெய் மற்றும் அரிசி என்பவற்றின் விலைகள் 2021 மேயில் அதிகரித்த வேளையில் உடன் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன. அதேவேளை, உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் மாத காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. இதற்கு, நலம் (மருத்துவ ஆய்வுகூட  பரிசோதனைகளுக்கான கொடுப்பனவுகள், தனியார் வைத்தியசாலைகள்/மருத்துவமனைகள் சிகிச்சை அறைகளுக்கான கட்டணங்கள்) மற்றும் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருள்கள் (பராமரிப்பு பொருட்கள், எல் பி வாயு) துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 3.0 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமும் 2021 மேயில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாகவும் 3.0 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Monday, May 31, 2021