தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 யூலையில் குறைவடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 யூனின் 6.3 சதவீதத்திலிருந்து யூலையில் 6.1 சதவீதத்திற்கு குறைவடைந்தது. இதற்கு 2019 யூலையில் நிலவிய உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 யூனின் 13.6 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 12.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 யூனின் 0.8 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 1.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 யூனின் 5.6 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 5.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, 2020 யூலையில் 0.0 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு, உணவு வகையில் காணப்பட்ட 0.15 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சி உணவல்லா வகையில் அவதானிக்கப்பட்ட அதே அளவு அதிகரிப்பினால் எதிரீடு செய்யப்பட்டமையே காரணமாகும். இதற்கமைய, உணவு வகையில் காய்கறிகள், சின்ன வெங்காயம், எலுமிச்சம்பழம் மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகள் 2020 யூலையில் வீழ்ச்சியடைந்த வேளையில், உணவல்லா வகையில் உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள்; வெறியக்குடிவகைகள் மற்றும் புகையிலை; மற்றும் நலத் துணை வகைகளின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. 

மேலும், மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 யூனின் 4.4 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்திருந்த வேளையில், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமானது 2020 யூனின் 4.6 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 

முழு வடிவம்

Published Date: 

Friday, August 21, 2020