கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2026 ஒத்தோபரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களினை எடுத்துகாட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு) 2026 ஒத்தோபரில் 55.3 இனைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டுகின்றது. அனைத்துச் துணைச் சுட்டெண்களும் நடுநிலையான எல்லைக்கு மேலாக இருந்தமை மூலம், இவ்விரிவாக்கமானது பரந்த அடிப்படையில் அமைந்திருந்தது.
புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்ணானது பருவகாலக் கேள்வியைப் பிரதிபலித்து புடவைகள் மற்றும் அணியும் ஆடை அத்துடன் உணவு மற்றும் குடிபானத் துறைகளின் தயாரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. மேலும், புடவைகள் மற்றும் அணியும் ஆடைத் துறையில் பருவகாலக் கேள்வியினால் தூண்டப்பட்டு தயாரிப்புத் துணைச் சுட்டெண்ணானது ஒத்தோபரில் அதிகரித்தது. இதற்கு மேலதிகமாக, புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் வளர்ச்சியுடன் இசைந்துசெல்லும் விதத்தில், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்கள் விரிவடைந்தன. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் இக்காலப்பகுதியில் மேலும் நீட்சியடைந்து, உள்ளீடுகளுக்கான அதிகரித்த கேள்வியைப் பிரதிபலித்தது.
வரவிருக்கும் பண்டிகை பருவ காலத்தின் போதான எதிர்பார்க்கப்படும் கேள்வியால் துணையளிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கான தயாரிப்பு நடவடிக்கைகளுக்கான தோற்றப்பாடானது சாதகமாகக் காணப்படுகின்றது.
பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 ஒத்தோபரில் 62.5 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவாக்கமொன்றை எடுத்துக்காட்டியது..
நிதியியல் பணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்திலிருந்து கிடைத்த குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களுடன், ஏனைய தனிப்பட்ட பணிகளில் மேம்பாடுகளினால் முதன்மையாகத் தூண்டப்பட்டு, வியாபார நடவடிக்கை விரிவடைந்தது.
தங்குமிடம், உணவு மற்றும் குடிபானப் பணிகள் அத்துடன் பொருட்கள் போக்குவரத்து என்பவற்றிலிருந்து கிடைத்த சாதகமான பங்களிப்புக்களுடன் ஒன்றிணைந்து, நிதியியல் பணிகளிலும் ஏனைய தனிப்பட்ட பணிகளிலும் விரிவாக்கமொன்றைப் பிரதானமாகப் பிரதிபலித்து, புதிய வியாபாரங்கள் வளர்ச்சியடைந்தன.
அதிகரிக்கின்ற தொழிற்பாடுசார் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு பல துணைத் துறைகளிடையே ஆட்சேர்ப்பினால் ஆதரவளிக்கப்பட்டு, தொழில்நிலை அதிகரித்தது. அதேவேளை, நிலுவையிலுள்ள பணியானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் உயர்வான வீதமொன்றில் வீழ்ச்சியடைந்தது.
பேண்டப்பொருளாதார நிலைமைகள், சுற்றுலாப்பயணி வருகைகளில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்புக்கள் மற்றும் வரவிருக்கும் பண்டிகைப் பருவகாலம் ஆகியவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கான வியாபார நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் சாதகமாகக் காணப்பட்டது. இருப்பினும், நிலவுகின்ற உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் தோற்றப்பாட்டிற்கு தொடர்ந்தும் கீழ்நோக்கிய இடர்நேர்வுகளினைத் தோற்றுவிக்கின்றன.








