வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2026 செத்தெம்பர்

வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 ஓகத்தில் பதிவுசெய்யப்பட்ட மிகையினைத் தொடர்ந்து, 2026 செத்தெம்பரில் ஐ.அ.டொலர் 128 மில்லியன் கொண்ட பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது. இருப்பினும், தாழ்ந்தளவிலான வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களின் உயர்ந்தளவிலான உட்பாய்ச்சல்கள் என்பன உயர்ந்தளவிலான முதலாந்தர வருமானப் பற்றாக்குறையினையும் பணிகள் கணக்கில் தாழ்ந்தளவிலான மிகையினையும் விஞ்சிக் காணப்பட்டமையினால் பற்றாக்குறையானது 2025 செத்தெம்பரிலும் பார்க்க தாழ்ந்தளவில் காணப்பட்டது. நடைமுறைக் கணக்கானது 2026இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 420 மில்லியன் கொண்ட ஒன்றுசேர்ந்த பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்தது.

ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் 2026 செத்தெம்பரில் சுருக்கமடைந்தது. இருப்பினும், ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 5.2 பில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 7.9 பில்லியனிற்கு விரிவடைந்தது.

வணிகப்பொருள் ஏற்றுமதி வருவாய்கள் 2026 செத்தெம்பரில் ஐ.அ.டொலர் 1,377 மில்லியனிற்கு 21.0 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்து, வரலாற்றில் உயர்ந்தளவிலான மாதாந்த ஏற்றுமதி வருவாய்களினைப் பதிவுசெய்ததுடன் 2025 யூலையில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 1,302 மில்லியன் தொகையிலான முன்னைய உச்சத்தினை விஞ்சிக் காணப்பட்டன.

அதேவேளை, வணிகப்பொருள் இறக்குமதிகள் மீதான செலவினமானது 2026 செத்தெம்பரில் 2.9 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்து, ஐ.அ.டொலர் 2,109 மில்லியனாகக் காணப்பட்டது.

மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினமானது 2026 செத்தெம்பரில் தொடர்ச்சியான ஐந்தாவது மாதத்திலும் (மாதாந்த அடிப்படையில்) வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், ஒன்றுசேர்ந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினமானது 2026இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 4.5 பில்லியன் தொகைக்கு 51.5 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்தது.

தனியாள் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான செலவினமானது 2026 செத்தெம்பரில் ஐ.அ.டொலர் 188 மில்லியனாகக் காணப்பட்டு, 2025 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் 34.4 சதவீத வீழ்ச்சியொன்றாகக் காணப்பட்டது. அதேவேளை, மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினமானது 2026இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,871 மில்லியன் தொகையாகக் காணப்பட்டது.

ஏற்றுமதி விலைகளிலும் பார்க்க விரைவான வேகமொன்றில் இறக்குமதி விலைகள் அதிகரித்தமையினால் வர்த்தக மாற்று விகிதமானது 2026 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் தேய்வடைந்தது. 2025இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வர்த்தக மாற்று விகிதமும் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் தேய்வடைந்தது.

பணிகளுடன் தொடர்புடைய வெளிப்பாய்ச்சல்களில் குறிப்பாக, பயணம் மற்றும் வான் போக்குவரத்துக் கொடுப்பனவுகள் என்பவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பு, பணிகள் உட்பாய்ச்சல்களில் ஏற்பட்ட வளர்ச்சியினை விஞ்சிக் காணப்பட்டமையினால் பணிகள் கணக்கு மிகையானது 2026 செத்தெம்பரில் ஐ.அ.டொலர் 119 மில்லியனிற்கு 34.3 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் வீழ்ச்சியடைந்தது. மாதாந்த பணிகள் கணக்கு மிகையில் தொடர்ச்சியான மிதமடைதலுடன், ஒன்றுசேர்ந்த பணிகள் கணக்கு மிகையானது 2026இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 2.2 பில்லியனிற்கு 22.3 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் வீழ்ச்சியடைந்தது.

சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2026 செத்தெம்பரில் 0.3 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் சிறிதளவு வீழ்ச்சியடைந்தன. மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2025இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் 1.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2026 செத்தெம்பரில் ஐ.அ.டொலர் 186 மில்லியனாக மதிப்பிடப்பட்டு, முன்னைய ஆண்டிலிருந்து 1.5 சதவீத அதிகரிப்பொன்றினைப் பிரதிபலித்தன. ஒன்றுசேர்ந்த சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2025இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 2.2 பில்லியனிற்கு 9.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன.

நேரடி முதலீடு மீதான உயர்ந்தளவிலான பங்கிலாபக் கொடுப்பனவுகளின் முக்கிய காரணமாக முதலாந்தர வருமானக் கணக்கில் பற்றாக்குறையானது 2025 செத்தெம்பரில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 152 மில்லியனிலிருந்து 2026 செத்தெம்பரில் ஐ.அ.டொலர் 241 மில்லியனிற்கு அதிகரித்தது. இருப்பினும், ஒன்றுசேர்ந்த முதலாந்தர வருமானப் பற்றாக்குறையானது 2025இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் தொடர்ந்தும் தாழ்ந்தளவில் காணப்பட்டது.

தொழிலாளர் பணவனுப்பல்கள் 2026 செத்தெம்பரில் ஐ.அ.டொலர் 734 மில்லியனிற்கு 5.6 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்தன. இதன்விளைவாக, 2026இன் சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த பணவனுப்பல்கள்  ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிற்கு 18.1 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் அதிகரித்தன.

அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஐ.அ.டொலர் 39.9 மில்லியன் தொகையிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த வேளையில், முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாகக் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2026 செத்தெம்பர் மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 4.7 மில்லியன் கொண்ட தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.

சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 செத்தெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனாகக் காணப்பட்டன.

2026 ஒத்தோபர் இறுதியளவில், ஐ.அ.டொலரிற்கெதிராக இலங்கை ரூபாவானது ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலான அடிப்படையொன்றில் 6.8 சதவீதத்தினால் பெறுமதித் தேய்வடைந்தது.

PDF

 

Published Date: 

Friday, October 30, 2026