இலங்கை மத்திய வங்கி, ராஜகிரியவிலுள்ள அதன் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்தில் “FinLit Expo – Colombo” நிகழ்வை தொடங்கி நிதியியல் அறிவு மாதம் - 2026 இனை அங்குரார்ப்பணம் செய்தது. நிதியியல் அறிவினை வலுப்படுத்தல், பொறுப்புமிக்க நிதியியல் நடத்தையினை ஊக்குவித்தல் மற்றும் நிதியியல் வசதிக்குட்படுத்தலை முன்னேற்றுதல் என்பவற்றுக்காக நாடளாவிய ரீதியல் பல வகையான ஈடுபாடுகளை இத்தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிணைக்கின்றது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கைக்கான நிதியியல் அறிவு வழிகாட்டலின் கீழ் பரந்த தேசிய முயற்சியின் பாகமாக நிதியியல் அறிவு மாதம் அமைகின்றது.
2026 ஒத்தோபர் 08 மற்றும் 09 திகதிகளில் இடம்பெறவுள்ள FinLit Expo – Colombo நிகழ்வு ஆர்வலர் நிறுவனங்களுடனான கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் தலைமையிலான பல்வகை ஆர்வலர் முயற்சியொன்றாக விளங்கும் இத்தேசியளவிலான நிகழ்ச்சித்திட்டத்தின் தொடக்கத்தினை அடையாளப்படுத்துகின்றது. பல்வேறு நிறுவனங்களுடன் ஈடுபடுவதற்கும் நிதியியல் சேவைகள் பற்றி அவர்களது புரிந்துகொள்ளலை மேம்படுத்துவதற்கும் தமது நிதியை முகாமைசெய்வது பற்றி நடைமுறைசார்ந்த அறிவினைப் பெற்றுக்கொள்வதற்கும் நிதி மோசடிகளிலும் ஏமாற்றுக்களிலிருந்தும் தம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதனை கண்டறிவதற்குமான வாய்ப்பினை இந்நிகழ்வு வழங்குகின்றது.
இதனைத்தொடர்ந்து, சமூகங்களுக்கு நிதியியல் கல்வியை வழங்குவதற்கும் நாளாந்த வாழ்வில் நிதியியல் அறிவைப் பிரயோகித்தலை ஊக்குவிப்பதற்கும் தொடரான நிகழ்வுகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும். ஆர்வலர் நிறுவனங்களுடன் கூட்டிணைந்து நடாத்தப்படும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளுடன் சேர்த்து உள்ளூர் சமூகங்களுடனான நேரடி ஈடுபாட்டிற்கான வாய்ப்புக்களை வழங்குவதை நோக்காகக் கொண்ட ஆறு பிராந்திய FinLit Expo நிகழ்வுகள் இதில் உள்ளடங்குகின்றன.
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, சமூக ஊடக வலைத்தளங்கள் ஊடாக பரந்தளவிலான பொதுமக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரம் இம்முயற்சிகளை மீள்வலுவூட்டி அவற்றின் அடைவினையும் விரிவுபடுத்தும். டிஜிட்டல் நிதியியல் சேவைகளின் வளர்ந்துவருகின்ற வகிபாகத்தினை அங்கீகரித்து, இந்நிகழ்ச்சித்திட்டம் டிஜிட்டல் நிதியியல் அறிவு, கியுஆர் மற்றும் ஏனைய இணையவழி கொடுப்பனவு ஊக்குவிப்புச் செயற்பாடுகளையும் உள்ளடக்கியிருக்கின்றது.
நிதியியல் அறிவு மாதம் 2026 ஊடாக மத்திய வங்கி அதன் நிதியியல் வசதிக்குட்படுத்தல் மற்றும் நிதியியல் முறைமையில் தகவலறிந்த பங்கேற்றலுக்கு ஆதரவளித்தல் என்பவற்றை நோக்கிய அதன் கடமைப்பொறுப்பினை தொடர்ந்தும் நிறைவேற்றுகின்றது. நிதியியல் அறிவு மாதத்தில் உற்சாகத்துடன் ஈடுபடுமாறும் “நிதியியல் ரீதியாக அறிவு பெற்ற இலங்கையை நோக்கி” என்ற தேசிய பயணத்தில் கைகோர்க்குமாறும் மத்திய வங்கி பொதுமக்களை ஊக்குவிக்கின்றது.








