இலங்கை மத்திய வங்கி அதன் முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டின் முக்கிய கண்டறியப்பட்டவைகளை வெளியிடுகின்றது – 2026 இன் இரண்டாமரைப்பகுதி

2026 ஆம் ஆண்டின் இரண்டாமரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது நிதியியல் முறைமை பற்றிய சந்தைப்பங்கேற்பாளர்களின் எண்ணப்பாங்கினையும் அவர்களது நம்பிக்கையினையும் பிரதிபலிக்கின்றது. இந்த அளவீடு 2026 யூலை 17 முதல் 2026 ஓகத்து 14 வரை நடாத்தப்பட்டது.

இவ்வெளியீடானது நிதியியல் சந்தைப் பங்கேற்பாளர்களின் நிதியியல் முறைமை மீதான ஒட்டுமொத்த நம்பிக்கை, கருதப்படும் இடர்நேர்வுகளுக்கான மூலாதாரங்கள் மற்றும் அவ் இடர்நேர்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் போன்ற முக்கிய கண்டறிகைகளை எடுத்து கூறுகின்றது. இவ்வெளியீட்டின் முடிவுகள் பதில் அளித்தவர்களின் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன் அவை இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களாக பொருட்கொள்ளப்படலாகாது.

முறைமைசார் இடர்நேர்வு அளவீடானது இலங்கையின் நிதியியல் முறைமையின் மீதான சந்தைப் பங்கேற்பாளர்களின் நம்பிக்கையையும் அதில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் அளவிட்டுக் கொள்வதுடன் அதன் தடங்களைக் கண்காணிக்கிறது. அளவீட்டின் மாதிரிக் கட்டமைப்பானது உரிமம் பெற்ற வங்கிகள், நிதிக்கம்பனிகள், முதனிலை வணிகர்கள், காப்புறுதி கம்பனிகள், கூறு நம்பிக்கை முகாமைத்துவக் கம்பனிகள், எல்லைக் கடன்வசதி அளிப்பவர்கள் மற்றும் ஒப்புறுதி அளிப்பவர்கள், பங்குத் தரகு கம்பனிகள், உரிமம்பெற்ற நுண்பாக நிதிக்கம்பனிகள், தரமிடல் முகவராண்மைகள், நிதியியல் உட்கட்டமைப்பு வழங்குநர்கள் மற்றும் செல்லிட பணச்சேவை வழங்குநர்கள் என்பவற்றின் இடர்நேர்வு முகாமைத்துவத்திற்கு பொறுப்பான நிருவாகிகளை உள்ளடக்குகின்றது.

2025 ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியிலிருந்து முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் கண்டறியப்பட்டவைகளை பிரசுரப்படுத்தி வெளியிடப்படும் அரையாண்டு அறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளத்தில் கிடைக்கப்பெறுவதுடன் பின்வரும் இணைப்பினூடாக அதனை அணுக முடியும்:  

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publicatio... 

Published Date: 

Wednesday, October 7, 2026