வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத் தொகுப்பு - 2026 ஓகத்து

வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது தொடர்ச்சியான நான்கு மாத பற்றாக்குறைகளைப் பின்தொடர்ந்து 2026 ஓகத்தில் ஐ.அ.டொலர் 133 மில்லியன் கொண்ட மிகையொன்றினைப் பதிவுசெய்தது. அண்மைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் இம்மிகையானது தாழ்ந்தளவிலான வர்த்தகப் பற்றாக்குறையினால் ஆதரவளிக்கப்பட்டு, தாழ்ந்தளவிலான இறக்குமதிச் செலவினத்தைப் பிரதிபலித்தது. நடைமுறைக் கணக்கானது 2026இன் சனவரி-ஓகத்து காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 291 மில்லியன் கொண்ட ஒன்றுசேர்ந்த பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்து, மத்திய கிழக்கு மோதலின் தீவிரத்தன்மையிலிருந்து தோற்றம்பெறுகின்ற வெளிநாட்டுத் துறையின் மீதான அழுத்தங்களைப் பிரதிபலித்தது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் மற்றும் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் என்பவற்றினால் உந்தப்பட்டு, 2026 ஓகத்தில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் விரிவடைந்தது. அதேவேளை, ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 4.3 பில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 7.2 பில்லியனிற்கு விரிவடைந்தது.

மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினமானது 2026 ஓகத்தில் தொடர்ச்சியான நான்காவது மாதத்திலும் வீழ்ச்சியடைந்தது. ஒன்றுசேர்ந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினமானது 2026இன் சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 4.0 பில்லியனாகக் காணப்பட்டு, 2025இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 61.6 சதவீத (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. 

தனியாள் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான செலவினமானது 2026 ஓகத்தில் ஐ.அ.டொலர் 189 மில்லியனாகக் காணப்பட்டு, 2025 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 24.2 சதவீத வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. அதேவேளை, மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினமானது 2026இன் சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,684 மில்லியன் தொகையாகக் காணப்பட்டது.

ஏற்றுமதி விலைகளிலும் பார்க்க விரைவான வேகமொன்றில் இறக்குமதி விலைகள் அதிகரித்தமையினால் வர்த்தக மாற்று விகிதமானது 2026 ஓகத்தில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் தேய்வடைந்தது. அதேபோன்று, 2025இன் சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வர்த்தக மாற்று விகிதமானது 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது.

பணிகள் கணக்கு 2026 ஓகத்தில் ஐ.அ.டொலர் 220 மில்லியன் கொண்ட மிகையொன்றினைப் பதிவுசெய்ததுடன், 2025 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 24.4 சதவீதக் குறைப்பொன்றினைப் பதிவுசெய்தது. மாதாந்த பணிகள் கணக்கு மிகையில் தொடர்ச்சியான மிதமடைதலுடன், ஒன்றுசேர்ந்த பணிகள் கணக்கு மிகையானது 2026 சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 2.1 பில்லியனிற்கு 21.4 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் வீழ்ச்சியடைந்தது.

சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2026 ஓகத்தில் 3.3 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியடைந்தது. மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2025இன் சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் 2.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2026 ஓகத்தில் ஐ.அ.டொலர் 264 மில்லியனாக மதிப்பிடப்பட்டு, முன்னைய ஆண்டிலிருந்து 2.1 சதவீத அதிகரிப்பொன்றினைப் பிரதிபலித்தது. 2025இன் சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒன்றுசேர்ந்த சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 2.1 பில்லியனிற்கு 10.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. 

தொழிலாளர் பணவனுப்பல்கள் 2026 ஓகத்தில் ஐ.அ.டொலர் 749 மில்லியனிற்கு 10.0 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்தன. இதன்விளைவாக, 2026இன் சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த பணவனுப்பல்கள்  ஐ.அ.டொலர் 6.1 பில்லியனிற்கு 19.8 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் அதிகரித்தன. 

அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு ஐ.அ.டொலர் 70.2 மில்லியன் தொகையினைக் கொண்ட தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த வேளையில், முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாகக் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு 2026 ஓகத்து காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 58.1 மில்லியன் கொண்ட தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது.

மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளினால் ஆதரவளிக்கப்பட்டு, சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 ஓகத்து இறுதியளவில் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிற்கு அதிகரித்தன.

2026 செத்தெம்பர் இறுதியளவில், ஐ.அ.டொலரிற்கெதிராக இலங்கை ரூபாவானது ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலான அடிப்படையொன்றில் 6.3 சதவீதத்தினால் பெறுமதித்தேய்வடைந்தது.

PDF

Published Date: 

Wednesday, September 30, 2026