கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, 2026 ஓகத்தில் 59.4 இனைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்தினைவிட மெதுவான வீதத்திலேனும் கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டியது. வீதிக் கட்டடவாக்க முன்னேற்றத்தினை தொடர்ந்தும் தடைப்படுத்தியிருந்த நிலவுகின்ற தார் பற்றாக்குறை கட்டடவாக்கத் தொழிற்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி உத்வேகத்தை மட்டுப்படுத்தியது என பல அளவீட்டுப் பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு, புதிய கட்டளைகள் சுட்டெண் ஓகத்தில் மேலும் அதிகரித்தது. அதேவேளை, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண்கள் மாதகாலப்பகுதியில் விரிவாக்கப் புலத்தில் காணப்பட்டன. துறைசார் வளர்ச்சிக்கு முக்கிய தடைகளாக தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களினதும் மூலப்பொருட்களினதும் தொடர்ச்சியான பற்றாக்குறைகளை பல அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் தொடர்ந்தும் எடுத்துக்காட்டினர். அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரச் சுட்டெண் ஓகத்தில் விரிவடைந்து காணப்பட்டு, நிரம்பலர்கள் மத்தியில் நிலவுகின்ற பணிச் சுமைகளைப் பிரதிபலித்தன.
அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான கட்டடவாக்க நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள், தார் பற்றாக்குறைகள் மற்றும் பொருட்களின் விலைகளில் தளம்பல்கள் தொடர்ச்சியாக சவால்களைத் தோற்றுவிக்கின்ற போதிலும் புதிதாக வழங்கப்பட்ட கருத்திட்டங்களினால் துணையளிக்கப்பட்டு சாதகமாகக் காணப்பட்டன.








