2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் (நிதித்தொழில் சட்டம்) 44ஆம் பிரிவின் நியதிகளுக்கமைய, இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர், பின்வரும் கம்பனிகளினால் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களினால் வைத்திருக்கப்படும் அனைத்து ஆதனங்களையும் ஏனைய சொத்துக்களையும் கையுதிர்ப்பதை, கைமாற்றுவதை அல்லது வேறுவகையில் கையாள்வதைத் தடுத்து அத்தகைய கம்பனிகளுக்கும் பணிப்பாளர்களுக்கும் முடக்கிவைக்கின்ற கட்டளைகளை விதித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, கீழே அட்டவணை 1இல் பட்டியலிடப்பட்ட கம்பனிகள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அத்தகைய முடக்கிவைக்கின்ற கட்டளைகளை உறுதிப்படுத்தியும் நீடித்தும் உள்ளது.
அட்டவணை 1: தற்போது முடக்கிவைக்கின்ற கட்டளைகள் அமுலிலுள்ள கம்பனிகளின் பட்டியல்
| தொ.இல. | கம்பனியின் பெயர் |
| 1 | கசகல கிரீன் பிளான்டேஷன் (பிறைவேட் ) லிமிடெட்* |
| 2 | சிலோன் கிரீன் லைஃப் பிளான்டேஷன் (பிறைவேட்) லிமிடெட்* |
| 3 | சிங்ஹே கெபிடல் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்** |
| 4 | புரோ ஷாப் எட்வர்டைசிங் ஹோல்டிங்ஸ் (பிறைவேட்) லிமிடெட் ** |
| 5 | ஏதென்ஸ் இன்டநஷனல் எடியுகேஷன் சென்டர் (பிறைவேட்) லிமிடெட்** |
| 6 | இயோன் லங்கா இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பில்ம் புரொடக்ஷன் இன்டநஷனல் கம்பனி (பிறைவேட்) லிமிடெட்** |
குறிப்பு: * நிதித்தொழில் சட்டத்தின் 42ஆம் பிரிவின் கீழ் தற்போது விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
** இக்கம்பனிகள் நிதித்தொழில் சட்டத்தின் 2ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு முரணாக நிதித்தொழிலைக் கொண்டு நடாத்தியுள்ளன அத்துடன்/அல்லது வைப்புக்களை ஏற்றுள்ளன என மத்திய வங்கி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் பணத்தை சட்டரீதியாக அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரமே வைப்புச் செய்யுமாறு அறிவுறித்தப்படுகின்றார்கள். அவ்வாறு செய்யத்தவறினால் இறுதியாக அவர்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை இழக்க நேரிடலாம்.
1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் அல்லது நிதித்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் உரிமமளிக்கப்பட்டுள்ள அல்லது அந்நியதிச் சட்டங்களின் ஏற்பாடுகளிலிருந்து குறிப்பாக விலக்களிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மாத்திரமே பொதுமக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதையும் மத்திய வங்கி பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அத்தகைய ஆட்கள் நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக நிதித்தொழிலைக் கொண்டு நடாத்தியுள்ளனரா அல்லது கொண்டுநடாத்துகின்றனரா அத்துடன்/அல்லது பொதுமக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்றுள்ளனரா அல்லது ஏற்றுக்கொள்கின்றனரா என்பதனை உறுதிப்படுத்துவதற்கு பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பில் மத்திய வங்கியினால் தற்போது விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வைப்புக்களை ஏற்றுகொள்கின்றவர்களாகத் தோன்றுவார்களாயின் அவர்கள் பற்றி இலங்கை மத்திய வங்கிக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களை இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொள்கிறது.








