இலங்கை மத்திய வங்கி அதன் முதலாவது ஒதுக்கு முகாமைத்துவ மாநாட்டினை கொழும்பில் நடாத்தியது

இலங்கை மத்திய வங்கியானது அதன் முதலாவது ஒதுக்கு முகாமைத்துவ மாநாட்டினை 2026 செப்டம்பர் 10–11 ஆம் திகதிகளில் கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில் வெற்றிகரமாக நடாத்தியது. இச்சிறப்புவாய்ந்த ஒன்றுகூடலானது அலுவல்சார் ஒதுக்கு முகாமைத்துவத்தில் ஏற்பட்டு வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னணி மத்திய வங்கிகளின் அதிகாரிகள், அரச சொத்து முகாமையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளியலாளர்கள் மற்றும் முதலீட்டுத் துறை சார்ந்த வல்லுநர்கள் போன்றோரை ஒன்றிணைத்து. இம்மாநாட்டில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), ஆசிய அபிவிருத்தி வங்கி, பிரான்ஸ் வங்கி,  சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி, இந்தோனேசியா வங்கி, மலேசியா நெகாரா வங்கி, கொரிய வங்கி, , தாய்லாந்து வங்கி,  அமெரிக்க நாடுகளுக்கிடையேயான அபிவிருத்தி வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி, சுவிஸ் தேசிய வங்கி, உலக வங்கி  மற்றும்  உலக தங்கச் சபை உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி  எறத்தாழ 50 பேச்சாளர்களும் பங்கேற்பாளர்களும் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில், எதிர்கால ஒதுக்கு முகாமைத்துவத்தை வடிவமைக்கும் பரந்துபட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, வெளிநாட்டு நாணய ஒதுக்குத் தாங்கியிருப்புக்களை கட்டியெழுப்பி வலுப்படுத்துவதற்கான உபாயங்கள், ஆசிய மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மீது அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பிளவுகளின் தாக்கங்கள், அலுவல்சார் ஒதுக்குகளின் டிஜிட்டல் மற்றும் அடையாளக்குறியாக்கப்பட்ட சொத்துகளின் பரிணாமவளர்ச்சியடைகின்ற வகிபாகம், பன்னாட்டு ஒதுக்கு சொத்துப்பட்டியல்களில் நாணயங்களின் செல்வாக்கு மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலரின் தொடர்ச்சியான முக்கியத்துவம், அத்துடன் தங்கம் மற்றும் ஏனைய மாற்று சொத்துகளின் பங்கு ஆகியவை முக்கிய கலந்துரையாடல் தலைப்புகளாக அமைந்தன. மேலும், முதலீட்டு தீர்மானம் மேற்கொள்ளல், சந்தை நுண்ணறிவு, முதலீட்டுத் தொகுப்பு மேம்படுத்தல் மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம், தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒதுக்கு முகாமைத்துவத்திற்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதும் பங்கேற்பாளர்களால் ஆராயப்பட்டது.

“புவிசார் அரசியல் நிச்சயமற்றதன்மைகளுக்கு மத்தியில் வெளிநாட்டு நாணய ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதில் சவால்கள்” என்ற தலைப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்கள் தலைமை உரையை நிகழ்த்தினார். தனது உரையில், ஒதுக்குகளைத் திரட்டுதல் என்பது பரந்த பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பிலிருந்து தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது என ஆளுநர் வலியுறுத்தினார். நிலைபேறான ஒதுக்குத் திரட்டுதலானது வலுவான வெளிநாட்டுத் துறை அடிப்படைகள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டி அதனைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய பொருளாதார இயலளவு ஆகியவற்றினால் துணையளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். 2022 இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, வெளிநாட்டு அதிர்வுகளுக்கெதிரான முதலாவது பாதுகாப்பு அரணாக பன்னாட்டு ஒதுக்குகள் வகிக்கும் முக்கிய பங்கை ஆளுநர் எடுத்துரைத்தார். குறிப்பாக, தீவிரமாக பாதிப்புக்குள்ளாகும் காலப்பகுதிகளில் நாடுகளுக்கு அவசியமான கால அவகாசத்தையும் கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் பன்னாட்டு ஒதுக்குகள் வழங்குகின்றன எனவும் மேலும், புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் ஒதுக்கு முகாமைத்துவத்தில் அதிகரித்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த காரணியாக மாறியுள்ளன எனவும், புவிசார் அரசியல் பிளவுகள், பொருளாதாரத் தடைகள், வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகளில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை முதலீடு, திரவத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொகுப்பு முகாமைத்துவம் தொடர்பான தீர்மானங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் உரையானது ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) பொருளாளர் திரு. டொமினிகோ நர்டெல்லி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இதில், வளர்ச்சியடைந்து வரும் பன்னாட்டு நிதிச் சூழல் தொடர்பாகவும் மற்றும் அது ஒதுக்கு மற்றும் சொத்து முகாமைத்துவத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் தொடர்பாகவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இம்மாநாட்டில், நிபுணர்களின் தொடர் விளக்கவுரைகள் மற்றும் குழு கலந்துரையாடல்கள், ஒதுக்கு முகாமைத்துவத்தில் தோற்றம்பெற்றுவரும் முன்னேற்றங்கள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கும், சிறந்த நடைமுறைகள் மற்றும் புத்தாக்க அணுகுமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், மத்திய வங்கிகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்கள் போன்றோருக்கு  இடையிலான தொழில்சார் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இம்மாநாடு சிறந்த வாய்ப்பை வழங்கியது.

முதலாவது ஒதுக்கு முகாமைத்துவ மாநாடானது, பன்னாட்டு ஒதுக்கு முகாமைத்துவ அரங்கில் உலகளாவிய மத்திய வங்கித்தொழில் சமூகத்துடனான இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஈடுபாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. உலகளாவிய நிதியியல் முறைமை முழுவதிலுமிருந்து முன்னணி தொழில்புரிவோர்கள் மற்றும் நிபுணர்கள்  போன்றோரை  ஒன்றுகூட்டியதன் மூலம், அதிகரித்து வரும் சிக்கலான மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் ஒதுக்கு முகாமைத்துவத்தின் மாறிவரும் தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையுடனும், எதிர்கால நோக்குடனும், தாக்குப்பிடிக்கும் தன்மையுடனும் செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து ஆராய்வதற்கான சரியான நேரத்திலான தளத்தை இம்மாநாடு வழங்கியது.

PDF

Published Date: 

Wednesday, September 16, 2026