வெளிநாட்டுத் துறையானது மத்திய கிழக்கின் அபிவிருத்திகளின் தாக்கத்தினை தொடர்ச்சியாக பிரதிபலித்ததுடன், மாதாந்த நடைமுறைக் கணக்கானது 2026 யூனில் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.
வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 யூனில் ஐ.அ.டொலர் 149 மில்லியன் கொண்ட பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்து, தொடர்ந்து மூன்றாவது மாதாந்தப் பற்றாக்குறையினைக் குறிக்கின்றது. ஒன்றுசேர்ந்த பற்றாக்குறையானது 2025இன் முதலரைப் பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மிகையுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 245 மில்லியனாகக் காணப்பட்டது.
ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வளர்ச்சியினை இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு விஞ்சியதன் காரணமாக, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2026 யூனில் விரிவடைந்தது. இதன் விளைவாக, ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2025இன் முதலரைப் பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 3.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 5.5 பில்லியன் தொகைக்கு விரிவடைந்தது.
எரிபொருள் இறக்குமதிகள் மீதான செலவினம், பிரதானமாக சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள் மீதான உயர்ந்தளவு செலவினத்தைப் பிரதிபலித்து, 2026 யூனில் 40.2 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்து காணப்பட்டபோதிலும், இது 2026 ஏப்பிறலின் ஐ.அ.டொலர் 886 மில்லியனிலிருந்து மேயில் ஐ.அ.டொலர் 536 மில்லியனிற்கும் மேலும் 2026 யூனில் ஐ.அ.டொலர் 465 மில்லியனிற்கும் தொடர்ந்து மிதமடைந்தது. ஒன்றுசேர்ந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 2026இன் முதலரைப் பகுதியில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3,168 மில்லியனாகக் காணப்பட்டு, 2025இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 58.8 சதவீதம் கொண்ட அதிகரிப்பொன்றைப் பதிவுசெய்தது.
தனியாள் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான செலவினம் 2026 யூனில் 27.1 சதவீதத்தினால் (மாதத்திற்கு மாதம்) ஐ.அ.டொலர் 182 மில்லியனாக வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினம் 2026இன் முதலரைப் பகுதியில் ஐ.அ.டொலர் 1,254 மில்லியனாகக் காணப்பட்டு 2025இன் இரண்டாமரைப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 1,572 மில்லியனிலிருந்து குறைவடைந்திருந்தது.
வர்த்தக மாற்று விகிதமானது, ஏற்றுமதி விலைகளை விட அதிகரித்த வேகமொன்றில் இறக்குமதி விலைகள் அதிகரித்தமையின் காரணமாக, 2026 யூனில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் தேய்வடைந்து காணப்பட்டது. அதேபோல, 2025இன் முதலரைப் பகுதியுடன் ஒப்பிடுகையில் வர்த்தக மாற்று விகிதமானது 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில் தேய்வடைந்து காணப்பட்டது.
பிரதானமாக பணிகள் உட்பாய்ச்சல்களை விடவும் பணிகள் வெளிப்பாய்ச்சல்கள் மிகவும் துரிதமாக அதிகரித்தமையின் காரணமாக பணிகள் கணக்கு மிகை 2026 யூனில் ஐ.அ.டொலர் 162 மில்லியனிற்கு மிதமடைந்து, முன்னைய ஆண்டிலிருந்து 33.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. 2025இன் முதலரைப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 2026இன் தொடர்புடைய காலப்பகுதியில், ஒன்றுசேர்ந்த பணிகள் கணக்கு மிகையில் 22.4 சதவீத சுருக்கமொன்றுக்கு இது வழிவகுத்தது.
சுற்றுலாப் பயணிகளின் வருகைகள், மத்திய கிழக்கு மோதல்களினால் சுற்றுலாத் துறை தொடர்ந்தும் பாதிக்கப்படுவதனால், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2026 யூனில் 9.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2025இன் முதலரைப் பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 1,168,044 வருகைகளுடன் ஒப்பிடுகையில் 2026இன் முதலரைப் பகுதியில் 1,146,573இற்கு சிறிதளவில் குறைவடைந்தன. சுற்றுலாத் துறை வருவாய்கள் 2026 யூனில் ஐ.அ.டொலர் 151 மில்லியனாக மதிப்பிடப்பட்டு, முன்னைய ஆண்டிலிருந்து 10.8 சதவீதம் கொண்ட சுருக்கமொன்றைப் பதிவுசெய்தன. மேலும், 2026இன் முதலரைப் பகுதியில் ஒன்றுசேர்ந்த சுற்றுலாத் துறை வருவாய்கள் 2025இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.8 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 1,511 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன.
தொழிலாளர் பணவனுப்பல்கள் 2026 யூனில் ஐ.அ.டொலர் 695 மில்லியனாக விளங்கி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 9.3 சதவீத அதிகரிப்பைப் பதிவுசெய்தன. 2026இன் முதலரைப் பகுதியில் ஒன்றுசேர்ந்த பணவனுப்பல் உட்பாய்ச்சல்கள் 23.2 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) ஐ.அ.டொலர் 4.6 பில்லியனிற்கு அதிகரித்தன.
அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஐ.அ.டொலர் 30.2 மில்லியன் தொகையிலான தேறிய உட்பாய்ச்சலொன்றைப் பதிவுசெய்த வேளையில், முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2026 யூன் மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 0.4 மில்லியன் தொகையிலான சிறிதளவு தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.
கணிசமானளவு வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுக்கு மத்தியில் சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 யூன் இறுதியில் ஐ.அ.டொலர் 6.5 பில்லியனாகக் காணப்பட்டன.
மத்திய கிழக்கு மோதலிலிருந்து எழுகின்ற வெளிநாட்டுத் துறை அழுத்தங்களைத் தொடர்ந்தும் பிரதிபலித்து, 2026 யூலை இறுதியிலுள்ளவாறு, ஐ.அ.டொலரிற்கெதிராக இலங்கை ரூபா ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 7.8 சதவீதத்தினால் தேய்வடைந்தது. எனினும், அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நாணய, இறை மற்றும் பேரண்டப்பொருளாதார கொள்கை வழிமுறைகளைப் பின்தொடர்ந்து, பெறுமதித்தேய்வு வேகமானது ரூபாவின் குறைந்தளவு தளம்பலுடன் அண்மையில் மிதமடைந்துள்ளது.








