இலங்கை மத்திய வங்கி, 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்; ஏற்பாடுகளுக்கமைய, நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி மீது 04.07.2025 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தீர்வு நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையானது, இலங்கை மத்திய வங்கியினால் பெரும்பாலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி 2021 ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளை தொடர்ச்சியாக மீறி வந்ததனால் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் அனைத்து சொத்துகள், தொழிற்பாடுகள்; மற்றும் விவகாரங்கள் மீதான முழுமையான கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்று, நிறுவனத்தின் பெயரிலும் அதன் சார்பிலும் அதன் வியாபார நடவடிக்கைகள் மற்றும் விவகாரங்களை முன்னெடுப்பதற்கு திரு. பி டபிள்யூ டி என் ஆர் ரொட்ரிகோ அவர்கள் அதே நாளில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் நிலையை உறுதிப்படுத்துவதற்கும் தீர்வு காண்பதற்கும் தீர்மான அதிகாரசபையாக இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் பல்வேறுபட்ட உபாய ரிதியிலான தலையீடுகளை மேற்கொண்டுள்ளது என்பதனை பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்புகின்றோம். நிறுவனத்தை மீளுயிர்ப்பிப்பதற்கான பல்வேறு கட்டமைப்பு சார்ந்த வாய்ப்புகளை ஆராய்தல், நிதித்துறையில் ஏற்கனவே நிறுவப்பட்ட அல்லது நிலைத்தன்மை கொண்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அல்லது உரிமம் பெற்ற நிதிகம்பனிகளினால் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியினை கையகப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகளை முனைப்புடன் மேம்படுத்துதல் மற்றும் தகுதியான முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஆர்வத்தினை வெளிப்படுத்துவதற்கான அழைப்பொன்றினை உத்தியோகப்பூர்வமாக வெளியிடுதல் உள்ளடங்கலாக, இலங்கை மத்திய வங்கியானது, நியமிக்கப்பட்ட நிர்வாகியுடனான நெருங்கிய ஒருங்கிணைப்போடு விரிவான தீர்வு முயற்சிகளை மேற்கொண்டது.
இவ்வாறன விரிவான மற்றும் இடைவிடாதா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நடைமுறைக்கு சாத்தியமான மற்றும் நிலையானதொரு முடிவு எட்டப்படவில்லை. நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், அதன் தற்போதைய நிலை தொடர்வது வைப்பாளர்கள் மற்றும் மற்றைய ஆர்வலர்களின் நலன்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டும், தீர்மானங்கள் செயன்முறையையின் இறுதிப் படியாக, 03.07.2026 முதல் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சிக்கு நிதி வியாபாரத்தினை கொண்டு நடாத்துவதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்துச்செய்யவும், வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 66ஆம் பிரிவின் படி நிறுவனத்தை ஒடுக்குவதற்கு நடவடிக்கைகளைத் தொடரவும் இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
இலங்கை வைப்புக் காப்புறுதி திட்டம் வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்படி நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு, ஒரு வைப்பாளருக்கு ரூ.1,100,000/- வரையில் உயர்ந்தபட்சத் தொகையை இழப்பீடாகச் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இது, நிறுவனத்தின் மொத்த வைப்பாளர்களில் 99.1% மானோருக்கு முழுமையான தொகையினை இழப்பீடாகச் செலுத்த வழிவகுக்கும் அதே நேரத்தில், மீதமுள்ள 0.9% மான வைப்பாளர்களில் ஒவ்வொருவரும் தங்களது வைப்புத் தொகையின் ஒரு பகுதியாக ரூ.1,100,000/- இழப்பீடாக பெறுவார்கள். இழப்பீடு செலுத்தப்படவேண்டிய தொகையானது, உரிமம் இரத்துசெய்யப்பட்ட திகதியில் உள்ளவாறான ஒவ்வொரு தனிப்பட்ட வைப்பாளர்களினதும் அனைத்து தகுதியான வைப்புகள் மற்றும் அட்டுறு வட்டியினையும் ஒருங்கினைத்ததன் பின்னர் கணிப்பிடப்படும். மீதமுள்ள தொகையானது, வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைக்கோரிக்கைகளின் முன்னுரிமைக்கு உட்பட்டு, நிறுவனத்தைக் கலைக்கும் செயல்பாட்டின் போது மீட்கப்படலாம். உரிமம் ரத்து செய்யப்பட்ட நாளிலிருந்து உயர்ந்தபட்சமாக 6 ஆண்டுகளுக்குள் அதாவதுஇ 02.07.2032 அன்றோ அல்லது அதற்கு முன்போ முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட கோரிக்கைப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் இழப்பீட்டைப் பெறலாம். இலங்கை வைப்புக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியில் மேற்கொள்ளப்பட்ட வைப்புகளுக்கான இழப்பீடு கோருவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையானது கொடுப்பனவு முறை, பொருந்தக்கூடிய நடைமுறைகள் மற்றும் இழப்பீட்டு கொடுப்பனவு ஆரம்பிக்கப்படும் திகதி உள்ளடங்களாக, உரிய நேரத்தில் செய்தித்தாள்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும். அதுவரையில், வைப்பாளர்கள் தங்களது மூல வைப்புச் சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய அடையாள ஆவணங்களை (தேசிய அடையாள அட்டை, பதிவுச் சான்றிதழ் போன்றன) தயாராக வைத்திருக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் அனைத்து கடன்படுநர்களும் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சிற்கு அவர்கள் செலுத்தவேண்டிய தொகையினை உரிய நேரத்தில் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் பெயரின் கீழ் உள்ள வங்கிக் கணக்கினூடாக மாத்திரம் செலுத்துமாறும் அத்துடன் பணம் செலுத்தாததன் காரணத்தால் தங்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து கொடுப்பனவுகளுக்குமான பதிவுகளை பேணுமாறும் ஆலோசனை வழங்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளுக்கு:
|
தொடர்புகொள்ள வேண்டிய நபர்/ நிறுவனம் |
நோக்கம் |
தொலைபேசி இலக்கங்கள் |
மின்னஞ்சல் முகவரி |
|
நிர்வாகி |
வைப்புகள், முற்பணத் தீர்ப்பனவு மற்றும் வேறு தெளிவுபடுத்தல்கள் தொடர்பிலான விசாரணைகள் |
0762050360
|
|
|
இலங்கை மத்திய வங்கியின் துரித அழைப்பு |
பொதுவான விசாரணைகள் |
1935 |
|
|
வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானங்கள் திணைக்களம் |
உரிமத்தை இரத்துச்செய்தல் தொடர்பிலான விசாரணைகள் |
0112477294 |
|
|
வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானங்கள் திணைக்களம் |
வைப்புக் காப்புறுதி |
0112477261 |








