கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது 2026 யூனில் மேலும் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை  (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2026 யூனில் மேலும் அதிகரித்தமையானது எதிர்பார்க்கப்பட்டவாறு மத்திய கிழக்கு யுத்தத்தின் காரணமாக உள்நாட்டு வலு விலைகளிற்கான தொடர்ச்சியான மேல்நோக்கிய சீராக்கங்களின் ஊடுகடத்தலினைப் பிரதிபலித்தது. இதற்கமைய, முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு) 2026 மேயில் பதிவாகிய 5.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 யூனில் 6.8 சதவீதமாகப் பதிவுசெய்யப்பட்டது.

உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு), 2026 மேயில் பதிவாகிய 7.8 சதவீதத்திலிருந்து 2026 யூனில் 8.4 சதவீதத்திற்கு அதிகரித்தமையானது முதன்மைப் பணவீக்கத்தின் அதிகரிப்பிற்கு முக்கியமாகப் பங்களித்தது. உணவுப் பணவீக்கமும் (ஆண்டிற்காண்டு) 2026 மேயில் பதிவாகிய 0.9 சதவீதத்திலிருந்து 2026 யூனில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

மாதாந்த அடிப்படையொன்றில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது 2026 யூனில் 2.1 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. இவ்வதிகரிப்பானது பெருமளவில் மீன் மற்றும் காய்கறிகள் என்பவற்றின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக  1.4 சதவீத புள்ளிகளினால் பங்களித்த உணவு வகையினால் உந்தப்பட்ட அதேவேளை  உணவல்லா வகையானது 0.7 சதவீத புள்ளிகளினால் பங்களித்தது. 

அதேவேளை, மையப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு) 2026 மேயில் பதிவாகிய 3.9 சதவீதத்திலிருந்து 2026 யூனில் 4.0 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

அதேவேளை, மையப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு) 2026 மேயில் பதிவாகிய 3.9 சதவீதத்திலிருந்து 2026 யூனில் 4.0 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

2026இன் இரண்டாம் காலாண்டிற்கான அடையப்பட்ட காலாண்டுச் சராசரிப் பணவீக்கமானது மத்திய வங்கியின் அண்மைய பணவீக்க எறிவுகளுடன் பரந்தளவில் ஒத்திசைந்து செல்லும் விதத்தில் தொடர்ந்தும் காணப்பட்டது. கிடைப்பனவாகவிருந்த தகவல்கள் மற்றும் ஊகங்கள் என்பவற்றின் அடிப்படையிலமைந்த 2026 மே மாத நாணயக் கொள்கைச் சுற்றில் மேற்கொள்ளப்பட்ட பணவீக்க எறிவுகள் முதன்மைப் பணவீக்கமானது பொருத்தமான கொள்கை வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு, நடுத்தர காலத்தில் இலக்கினை அண்மித்துத் தளர்வடைவதற்கு மற்றும் உறுதிநிலைப்படுத்தப்படுவதற்கு முன்னர் எதிர்வருகின்ற காலப்பகுதியில் 5 சதவீத இலக்கிற்கு மேலாகத் தொடர்ந்தும் காணப்படக்கூடுமென்பதனைக் குறித்துக்காட்டுகின்றன. இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவுகின்ற பதற்றங்களின் நிலையற்றதன்மை மற்றும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு ஆகிய இரண்டிலுமான பொருளாதார நடவடிக்கைகளிடையேயான பரந்தளவிலான கசிவுத்தாக்கங்கள் என்பவற்றிற்கு மத்தியில் உள்நாட்டுப் பணவீக்கத் தோற்றப்பாடானது தொடர்ந்தும் உயர்வடைந்த நிச்சயமற்றதன்மைக்குட்பட்டுக் காணப்படுகின்றது.

PDF

Published Date: 

Tuesday, June 30, 2026