இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய சிரேஷ்ட அலுவலர்களின் பங்கேற்புடன் 2026 யூன் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கி திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அரசாங்க அலுவலர்கள், வர்த்தக சமூகம் அதேபோன்று பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதனை இந்நிகழ்ச்சித்திட்டம் இலக்காகக் கொள்கின்றது. இந்நிகழ்ச்சித்திட்டம் வங்கிகள், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மற்றும் ஏனைய ஆர்வலர்களின் பங்கேற்புடன் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கார் தரிப்பிட வளாகத்தில் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை இடம்பெறும்.
‘டிஜிட்டல் கொடுப்பனவுகளின் ஊடாக எதிர்காலத்தை வடிவமைப்போம்’ எனும் கருப்பொருளின் கீழ் நிதியியல் நிறுவனங்களுடனும் ஏனைய ஆர்வலர்களுடனுமான கூட்டிணைப்புடன் மத்திய வங்கியினால் தொடங்கப்பட்ட தேசியளவிலான பிரசாரமொன்றின் பாகமாக இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. இதனையொத்த ஊக்குவிப்பு நிகழ்வுகள் அம்பாந்தோட்டை, நுவரெலியா, தம்புள்ளை மற்றும் குருநாகல் ஆகிய பிராந்தியங்களில் வெற்றிகரமாக இடம்பெற்று பரந்தளவிலான விழிப்புணர்வை தோற்றுவித்ததுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் சௌகரியத்தையும் நன்மைகளையும் அனுபவிப்பதற்கு வியாபாரங்களையும் பொதுமக்களையும் இயலச்செய்தது.
இந்நிகழ்வில், பரந்த வகையிலான டிஜிட்டல் கொடுப்பனவு சேவைகளுக்குப் பதிவுசெய்துகொள்வதற்கும் செயல்திறன்மிக்கவாறு பயன்படுத்துவதற்கும் பொதுமக்கள் வங்கிகள், நிதிக் கம்பனிகள் மற்றும் இலத்திரனியல் பணச் சேவை வழங்குநர்கள் அதேபோன்று LANKAQR மற்றும் இலங்கையில் வேறு வங்கிகளுக்கிடையிலான டிஜிட்டல் கொடுப்பனவு முறைமைகளைத் தொழிற்படுத்துகின்ற லங்காபே (பிறைவட்) லிமிடெட் என்பன உள்ளடங்கலாக நிதியியல் நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட தேவைக்கேற்றவாறான உதவியினைப் பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகவிருப்பர். டிஜிட்டல் கொடுப்பனவுகளின் வசதியை நடைமுறை ரீதியாக அனுபவிப்பதற்கு சமூகமளிப்பவர்கள் நிகழ்வு இடம்பெறும் வளாகத்தினுள் அமையப்பெற்றுள்ள வணிகர் விற்பனைக் கூடங்களிலிருந்து பல வகையான பொருட்கள் மற்றும் சேவைகளை கழிவு செய்யப்பட்ட விலைகளில் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொள்வர். மேலும், LANKAQR கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளல் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு வியாபார நிறுவனங்களுக்காக திருகோணமலை நகர் பிரதேசத்தில் நிதியியல் நிறுவனங்கள் வணிகர் ஈடுபாட்டு முயற்சியொன்றையும் நடாத்தும்.
நிதியியல் நிறுவனங்களால் வழங்கப்படும் வழிகாட்டுதல் மற்றும் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறான உதவி என்பவற்றுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் வசதி பற்றிய தமது விழிப்புணர்வையும் அனுபவத்தையும் அதிகரிப்பதற்கு இவ்வாய்ப்பின் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு திருகோணமலை பொதுமக்கள் மற்றும் வர்த்தக சமூகத்திற்கு இலங்கை மத்திய வங்கி அழைப்பு விடுக்கின்றது.








