இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளினைப் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நிறைவுசெய்து, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிஎஉ 508 மில்லியன் தொகைக்கான (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 695 மில்லியன்) உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்கியது.
நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான செயலாற்றமானது பொதுவாக வலுவாகக் காணப்பட்டது. எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவு மீட்சி விலையிடலினை மீட்டெடுத்தல் குறித்த முன்கூட்டிய நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டன. புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகளின்மை மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கப்படாமை அல்லது தீவிரப்படுத்தப்படாமை என்பன மீதான தொடர்ச்சியான செயலாற்றப் பிரமாணங்கள் பின்பற்றப்படவில்லை. 2025 திசெம்பர் இறுதிக்கான அனைத்து அளவுசார் செயலாற்றப் பிரமாணங்களும் நிறைவுசெய்யப்பட்டன. அநேகமான கட்டமைப்புசார் அளவுகோல்கள் நிறைவுசெய்யப்பட்டன அல்லது தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
மத்திய கிழக்கில் நிலவுகின்ற யுத்தம் மற்றும் டித்வா புயலினை உடனடுத்து ஏற்பட்ட தாக்கங்கள் என்பன கீழ்நோக்கிய இடர்நேர்வுகளினை ஏற்படுத்துகின்ற போதிலும், பொருளாதாரமானது தாக்குப்பிடிக்குந்தன்மையினைத் தொடர்ந்தும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து கடின உழைப்பின் மூலம் ஈட்டெடுக்கப்பட்ட நன்மைகள் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்கும் பாதிப்படையக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்குத் துணைபுரிவதற்கும் விரைவான கொள்கை ரீதியிலான பதிலிறுப்புக்களினை இயலச்செய்துள்ளன.








