இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2026 ஏப்பிறல்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 ஏப்பிறலில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), பருவகால கோக்கினைப் பின்பற்றி 42.6 சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்து 2026 ஏப்பிறலில் சுருக்கமடைந்து. புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு ஆகிய துணைச் சுட்டெண்கள் மாச்சில் பருவகால உச்சத்துடன் ஒப்பிடுகையில் மாத காலப் பகுதியில் வீழ்ச்சியடைந்து, சுட்டெண்ணில் ஒட்டுமொத்த வீழ்ச்சியை விளைவித்தன.

பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கமைய, குறிப்பாக, உணவு மற்றும் குடிபான தயாரிப்பு அத்துடன் புடவைகள் மற்றும் ஆடைகள் துறைகளின் தயாரிப்பில் பருவகால கேள்வி குறைவடைந்து செல்லுதல், புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்ணில் சுருக்கத்திற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது. உற்பத்தி துணைச் சுட்டெணில் வீழ்ச்சிக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பல தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தமையினால் ஏப்பிறலில் குறைவான வேலை நாட்கள் பெருமளவில் காரணமாக அமைந்தன. பருவகால தொழிலாளர் தேவைப்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தற்காலிக தொழிற்படையைக் குறைத்தமையினால் தொழில்நிலை துணைச்சுட்டெண் வீழ்ச்சியடைந்தது.  புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் குறைவடைதலுடன் இணைந்து கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, பண்டிகையுடன் தொடர்புபட்ட இடையூறுகள் மற்றும் மத்திய கிழக்கில் தற்போதைய மோதலிலிருந்து உருவாகின்ற தீவிரமடைந்த ஏற்பாட்டுச் சேவைச் சவால்களினால் உந்தப்பட்டு, நிரம்பலர் விநியோக நேரம் மேலும் நீட்சியடைந்தது. 

அடுத்த மூன்று மாதங்களுக்கான தயாரிப்பு நடவடிக்கைகளுக்கான எதிர்பர்க்கைகள் முன்னேற்றமொன்றை எடுத்துக்காட்டுகின்ற போதிலும், மத்திய கிழக்கில் தற்போதுள்ள பதற்றங்களுடன் தொடர்புடைய இடர்நேர்வுகள் மீதான எச்சரிக்கையினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 ஏப்பிறலில் 46.7 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, முக்கியமாக பண்டிகைக் காலத்தின் பின்னர் பருவகால தாக்கங்கள் மற்றும் வலு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பன காரணமாக பணிகள் நடவடிக்கைகளில் சுருக்கமொன்றை எடுத்துக்காட்டுகின்றது.

முதன்மையாக, எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட உயர்வு, பண்டிகைக்கால விடுமுறைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட மெதுவடைதல் என்பன காரணமாக, மாதகாலப்பகுதியில் பெரும்பாலான துறைகளுக்கிடையில் வியாபார நடவடிக்கைகள்; வீழ்ச்சியடைந்தன. பொருட்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய தனிப்பட்ட பணிகள் நடவடிக்கைகள் துணைத் துறைகள் சடுதியான சுருக்கத்தினைப் பதிவு செய்த அதேவேளை, காப்புறுதி, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம்;, தங்குமிடம், உணவு மற்றும் குடிபான பணிகள் நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க சரிவுகளைப் பதிவுசெய்தன.

புதிய வியாபாரங்கள் குறிப்பாக, பொருட்கள் போக்குவரத்து, காப்புறுதி, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம்;, தங்குமிடம், உணவு மற்றும் குடிபான பணிகள் நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட சீர்குலைவு காரணமாக 2023 ஏப்பிறல் தொடங்கி முதல் முறையாக 2026 ஏப்பிறலில் வீழ்ச்சியடைந்தன.

ஒப்பந்தம் முடிவுறுதல், ஓய்வுபெறுதல்கள் மற்றும் பதவிவிலகுதல்கள்; காரணமாக, 2026 ஏப்பிறலில் தொழில்நிலை வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, நிலுவையிலுள்ள பணி முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதத்தில் காணப்பட்டபோதிலும், தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. 

யுத்தத்தின் முடிவினைத் தொடர்ந்து நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்படுகின்ற உறுதிப்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்டு, அடுத்த காலாண்டுக்கான வியாபார நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் சாதகமாகக் காணப்படுகின்றன. இருப்பினும், தோற்றப்பாடானது, மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பரந்தளவிலான உலகளாவிய நிச்சயமற்றத்தன்மைகள் உள்ளடங்கலாக பல்வேறு இடர்நேர்வுகளுக்கு உட்பட்டதாகவிருக்கின்றது.

PDF

 

Published Date: 

Friday, May 15, 2026