தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 ஏப்பிறலில் அதிகரித்தது

 தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2021 மாச்சின் 5.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2020 ஏப்பிறலில் நிலவிய குறைவான தளப் புள்ளிவிபரத் தாக்கம் முக்கிய காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 8.8 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 9.7 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 2.0 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஏப்பிறலில் 5.3 சதவீதத்தில் மாற்றமின்றி காணப்பட்டது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, 2021 ஏப்பிறலில் சிறிதளவு அதிகரிப்பினை பதிவுசெய்தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்பே காரணமாகும். அதற்கமைய, உணவு வகையினுள் 2021 ஏப்பிறல் காலப்பகுதியின் போது பிரதானமாக தேங்காய் எண்ணெய், உடன் மீன், மற்றும் உடன் பழங்கள் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புகள் அவதானிக்கப்பட்டன. எவ்வாறாயினும், மாதகாலப்பகுதியில் தேங்காய் மற்றும் மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியை பதிவு செய்தன.  அதேவேளை, ஆடை மற்றும் காலணி (ஆடைகள்), போக்குவரத்து (உராய்வுநீக்கி) மற்றும் நாணவிதப் பொருட்கள் மற்றும் பணிகள் (முடிவெட்டுதல் மற்றும் சவரம் செய்யும் கட்டணங்கள்) துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்பின் காரணமாக உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள், மாதகாலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

மேலும், ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம், 2021 மாச்சின் 4.3 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 மாச்சின் 4.3 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 4.4 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, May 21, 2021