கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 சனவரியில் 3.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2020 திசெம்பரின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 3.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2020 சனவரி காலப்பகுதியில் நிலவிய உயர்வான தளத்தின் புள்ளிவிபரத் தாக்கம் இதற்குக் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 திசெம்பரின் 9.2 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 6.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 திசெம்பரின் 2.0 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 1.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 திசெம்பரில் 4.6 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 4.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2021 சனவரியில் 0.51 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகளிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள் 2021 சனவரியில் முறையே 0.29 சதவீதத்தினையும் 0.22 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் சின்ன வெங்காயம், தேங்காய் மற்றும் கடலுணவு என்பவற்றின் விலைகள் 2021 சனவரியில் அதிகரித்தன. எனினும், மாத காலப்பகுதியில் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. அதேவேளை, உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் மாத காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. இதற்கு, சுகாதார துணைத் துறையில் (தனியார் வைத்தியசாலைகளுக்கான கொடுப்பனவுகள்) அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் முக்கிய காரணமாகும்.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020  திசெம்பரில் 3.5 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமானது 2021 சனவரியில் 3.1 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Friday, January 29, 2021