2019 ஓகத்தில் பணவீக்கம் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 யூலையில் 2.2 சதவீதத்திலிருந்து 2019 ஓகத்தில் 3.4 சதவீதமாக அதிகரித்தது. முன்னைய ஆண்டின் தொடர்புடைய மாதத்தில் நிலவிய குறைந்த தளம் மற்றும் உணவு அத்துடன் உணவல்லா வகைகள் இரண்டினதும் பொருட்களின் மாதாந்த விலைகளின் உயர்வும் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்தது. அதேவேளை, 2019 ஒகத்தில் ஆண்டிற்கு ஆண்டு உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் முறையே 0.6 சதவீதத்தினையும் 5.6 சதவீதத்தினையும் பதிவுசெய்தது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2019 யூலையில் 1.9 சதவீதத்திலிருந்து 2019 ஓகத்தில் 2.0 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. 

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2019 ஓகத்தில் 0.2 சதவீதத்தில் பதிவாகியதுடன் இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்களே காரணமாக அமைந்தன. உணவு வகையினுள் வாழைப்பழம், அரிசி, மற்றும் உடன்மீன் என்பனவற்றின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. இதற்கு மேலதிகமாக, உணவல்லா வகையினுள், போக்குவரத்து விடயங்கள்; வெறியக் குடிவகைகள், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் மற்றும் ஆடைகள் மற்றும் காலணி போன்ற துணை வகைகளின் விலைகள் மாதகாலப்பகுதியில் அதிகரித்தன. 

முழுவடிவம்

Published Date: 

Monday, September 23, 2019