இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் மத்திய கிழக்கு மோதல்களிலிருந்து தோற்றம்பெறுகின்ற நிச்சயமற்றதன்மைகளுக்கு குறிப்பான கவனம்செலுத்தி, உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீது பரிணமிக்கின்ற அபிவிருத்திகளையும் தோற்றப்பாட்டையும் கவனமாகப் பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.

புவிசார் அரசியல் பதற்றங்களின் தீவிரமடைதலின் காரணமாக ஏற்பட்டுள்ள உயர்வடைந்த நிச்சயமற்றதன்மைக்கு மத்தியில் உலகளாவிய வலு விலைகளின் சடுதியான அதிகரிப்பு மற்றும் வர்த்தக இடையூறுகள் என்பன உள்நாட்டு வலு விலைகளில் குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய சீராக்கமொன்றினைத் தேவைப்படுத்தின. 5 சதவீதம் கொண்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 2026 பெப்புருவரியில் 1.6 சதவீதமாகக் (ஆண்டிற்காண்டு) காணப்படுகின்ற தற்போதைய குறைந்த மட்டத்திலான பணவீக்கமானது உயர்ந்தளவிலான வலு விலைகள் மற்றும் பணவீக்கத்தின் மீதான அவற்றின் கசிவுத் தாக்கங்களுக்கு இடமளிப்பதற்கு போதியளவிலான இடைவெளியினை வழங்குகின்றது. அண்மையில் கிடைப்பனவாகவுள்ள தரவுகள் மற்றும் நிலவுகின்ற நிச்சயமற்றதன்மைகள் என்பவற்றினைக் கருத்திற்கொண்டு, பணவீக்கமானது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க முன்னதாக 2026இன் இரண்டாம் காலாண்டில் 5 சதவீதம் கொண்ட இலக்கினை எட்டுமென தற்போது எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கமானது அதன்பின்னர் இலக்கினை அண்மித்துக் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆண்டின் இறுதியில் டித்வா புயலினால் ஏற்பட்ட இடையூறுகளிற்கு மத்தியிலும் பொருளாதாரமானது 2025இல் 5.0 சதவீதம் கொண்ட வலுவான உண்மை வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. முன்னணிப் பொருளாதாரக் குறிகாட்டிகள் 2026இன் முற்பகுதியில் புயலிற்குப் பின்னரான வலுவான மீட்சியொன்றினை எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், தற்போது நிலவுகின்ற மோதல் நீடிக்கும் பட்சத்தில், அதிலிருந்தான கசிவுத் தாக்கங்கள் எதிர்வருகின்ற காலப்பகுதியில் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும்.

உயர்ந்தளவிலான பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறை வருவாய்கள் என்பவற்றுடன் இணைந்து, இறக்குமதிகளுடன் ஒப்பிடுகையில் வலுவான ஏற்றுமதி வருவாய்களினால் ஆதரவளிக்கப்பட்டு வெளிநாட்டுத் துறையானது 2026இன் முதல் இரண்டு மாதங்களில் தொடர்ந்து வலுவடைந்து காணப்பட்டது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 பெப்புருவரி இறுதியில் ஐ.அ.டொலர் 7.3 பில்லியன் தொகைக்கு அதிகரித்ததுடன் மத்திய வங்கியானது ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில சந்தையிலிருந்து கணிசமானளவிலான வெளிநாட்டுச் செலாவணியினைக் கொள்வனவு செய்தது. இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவுகின்ற மோதலானது இலங்கையின் வெளிநாட்டுத் துறைத் தோற்றப்பாட்டிற்குக் குறிப்பாக, வலு, சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் பணவனுப்பல்சார் பாய்ச்சல்கள் என்பன ஊடாக இடர்நேர்வுகளினைத் தோற்றுவிக்கின்ற போதிலும் தாக்கத்தின் ஒட்டுமொத்த அளவானது நிச்சயமற்றதாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றது. இலங்கை ரூபாவானது 2026இன் முற்பகுதியில் ஒப்பீட்டளவில் உறுதியாகத் தொடர்ந்தும் காணப்பட்ட வேளையில், மத்திய கிழக்கு மோதலின் ஆரம்பத்தினைத் தொடர்ந்து பிராந்திய நாடுகளின் செலாவணி வீதங்களினைப் போன்று சில பெறுமதித்தேய்மான அழுத்தங்கள் அவதானிக்கப்பட்டன.

பணவீக்கம் இலக்கை அண்மித்து நிலையுறுதியடைவதை நிச்சயப்படுத்துவதற்குப் பொருத்தமான கொள்கை வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை, பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை எய்துவதனை ஆதரவளிப்பதற்குச் சபை தொடர்ந்தும் தயாராகவுள்ளது.

நாணயக் கொள்கை மீளாய்வு பற்றிய அடுத்த கிரமமான அறிக்கை வெளியீடு 2026 மே 26ஆம் நாளன்று நடைபெறும்.

PDF

Published Date: 

Wednesday, March 25, 2026