இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தை அதிகரிக்கின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 100 அடிப்படைப் புள்ளிகளினால் 8.75  சதவீதத்திற்கு அதிகரிப்பதற்குத் தீர்மானித்தது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் ஆகிய இரண்டிலும் பரிணமிக்கின்ற நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு என்பவற்றினைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.  

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள பதற்றங்களிலிருந்து தோற்றம்பெறுகின்ற நிச்சயமற்றதன்மைகள், உலகளாவிய பண்ட விலைகள் குறிப்பாக பெற்றோலிய விலைகள் உயர்வடைதவற்கு தூண்டுதலளித்து, உலகளாவிய அதேபோன்று உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளன. உயர்ந்தளவான உலகளாவிய எண்ணெய் விலைகள், உள்நாட்டு வலு விலைகளில் கணிசமான மேல்நோக்கிய சீராக்கங்களை தேவைப்படுத்தி, 2026 ஏப்பிறலில் 5.4 சதவீதம் கொண்ட (ஆண்டிற்கு ஆண்டு) பணவீக்கத்திற்கு பெருமளவில் பங்களித்துள்ளன. பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய அதிகரிப்பானது பாரியளவில் நிரம்பலினால் தூண்டப்பட்டு காணப்படுகின்ற அதேவேளை, தொடர்ச்சியான கொடுகடன் விரிவாக்கம், கொடுகடனினால் தூண்டப்பட்ட இறக்குமதிகள், மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய முன்னணிக் குறிகாட்டிகள் என்பனவற்றினால் காண்பிக்கப்பட்டவாறு பொருளாதாரத்தின் கேள்வி நிலைமைகளும் வலுவடைந்துள்ளன. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கமானது தளர்வடைந்து அதன் இலக்கினை அண்மித்து உறுதியடையும் முன்னர், எதிர்வரும் காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கிற்கு மேல் காணப்படக்கூடும். பணவீக்க எதிர்பார்க்கைகள் நடுத்தர காலத்தில் பணவீக்க இலக்கினை அண்மித்து நன்கு நிலைநிறுத்தப்பட்டிருப்பினும், குறுகிய காலத்தில் அவை ஓரளவு அதிகரித்துள்ளன. 

மத்திய கிழக்கு மோதலிலிருந்து தோற்றம்பெறுகின்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், வெளிநாட்டுத் துறை மீதான அண்மைக்கால அழுத்தங்கள் எதிர்பார்க்கப்பட்ட அதேவேளை, ஊகத்துடனான செயற்பாடுகள் காரணமாக அண்மைய வாரங்களில் இவ்வழுத்தங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. 2025இல் பதிவுசெய்யப்பட்ட வலுவான செயலாற்றத்தைப் பின்தொடர்ந்து, வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு மிகையானது 2026இன் முதலாம் காலாண்டில் மிதமடைந்து காணப்பட்டது. குறிப்பாக, எரிபொருள் இறக்குமதிகள் மீதான அதிகரித்த செலவினம் மற்றும் சுற்றுலாத் துறை வருவாய்களில் ஏற்பட்ட மெதுவடைதல் என்பனவற்றினால் தூண்டப்பட்ட விரிவடைகின்ற வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், 2026இன் இதுவரையான காலப்பகுதியில், தொழிலாளர் பணவனுப்பல்கள் தாக்குபிடிக்குந்தன்மையுடன் காணப்படுகின்றன. வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுகளுக்கு மத்தியில், மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 ஏப்பிறல் இறுதியளவில், ஐ.அ.டொலர் 6.8 பில்லியனாக  விளங்கின. பல்வேறு பிராந்திய நாடுகளின் நாணயங்களுக்கொப்பாக, அண்மைய வாரங்களில் இலங்கை ரூபாய் குறிப்பிடத்தக்க தேய்மான அழுத்தங்களை எதிர்கொண்டிருந்த போதிலும், நிலைமைகள் அதன்பின்னர் ஓரளவு தளர்வடைந்துள்ளன. முன்னோக்கி நோக்குகையில், எதிர்பார்க்கப்படும் கணிசமான பல்புடை உட்பாய்ச்சல்களுடன் இணைந்து தளர்வடையுமென எதிர்பார்க்கப்படும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் அண்மையில் அறிவிக்கப்பட்ட வழிமுறைகள் என்பன வெளிநாட்டுத் துறையின் உறுதிப்பாட்டிற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

உயர்வடைந்த பணவீக்க எதிர்வுகூறல், வலு விலைச் சீராக்கங்களினால் முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்படக்கூடிய இரண்டாம் சுற்றுத் தாக்கங்கள், இறக்குமதி கேள்வியைத் தூண்டுகின்ற தனியார் துறை கொடுகடனின் தொடர்ச்சியான விரிவாக்கம், வெளிநாட்டுத் துறை மீதான அழுத்தங்கள் அதேபோன்று பணவீக்க எதிர்பார்க்கைகள் நிலைநிறுத்தப்படாமைக்கான இடர்நேர்வு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு, இத்தருணத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை இறுக்கமடையச் செய்வது பொருத்தமானதென சபை கருதியது. இந்நிலைப்பாடு, உள்நாட்டு விலை உறுதிப்பாட்டைப் பேணுவதற்கான சபையின் தொடர்ச்சியான கடப்பாட்டினை பிரதிபலிக்கின்றது. 

மத்திய வங்கியானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கத்திலிருந்து வரும் தரவுகளையும் தோற்றம்பெற்றுவரும் இடர்நேர்வுகளையும் கவனமாக மதிப்பீடுசெய்து, பணவீக்கம் இலக்கை அண்மித்து நிலையுறுதியடைவதை நிச்சயப்படுத்துவதற்குப் பொருத்தமான கொள்கை வழிமுறைகளை மேற்கொள்கின்ற அதேவேளை, பொருளாதாரம் நடுத்தரகாலத்தில் அதன் உள்ளார்ந்த ஆற்றலை எய்துவதற்கு ஆதரவளிக்க தொடர்ந்தும் தயாராகவுள்ளது. 

நாணயக் கொள்கை மீளாய்வு பற்றிய அடுத்த கிரமமான அறிக்கை வெளியீடு 2026 யூலை 22ஆம் நாளன்று நடைபெறும்.

PDF

Published Date: 

Tuesday, May 26, 2026