வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட அறிக்கை

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்டிருந்த உரிமம்பெற்ற பல நிதிக் கம்பனிகள் முறிவடைந்தமை மற்றும் அதனைத்தொடர்ந்து அவற்றின் உரிமங்கள் இரத்துச்செய்யப்பட்டமை தொடர்பான பொறுப்புக்களைச் சுமத்துகின்ற பல ஊடக அறிக்கைகளை இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது.

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் உறுதிப்பாட்டினை வலுப்படுத்தி அதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களில் ஒன்றாக விளங்கும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வதனை மேற்கொண்டு வருகின்றது. அத்தகைய உறுதித்தன்மையானது குறைந்தபட்ச மூலதனம், குறைந்தபட்ச திரவத்தன்மை மற்றும் ஒதுக்குத் தேவைப்பாடுகள்; இடர்நேர்வுகள் ஒன்றுதிரள்வதனைக் குறைப்பதற்காக முதலீட்டு ஒழுங்குவிதிகள் மற்றும் கம்பனி ஆளுகைத் தேவைப்பாடுகள் போன்றவற்றினூடாக உறுதிப்படுத்தப்படுகிறது.

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் பணிப்பாளர் சபைகளினாலும் முதன்மைவாய்ந்த முகாமைத்துவ ஆளணியினராலும் முகாமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சுயாதீனமான வியாபாரத் தீர்மானங்களை எடுப்பதுடன், வியாபார முகாமைத்துவத்திற்கும் பூரண பொறுப்பு வகிக்கின்றன.இலங்கை மத்திய வங்கியினால் தொடர்ச்சியான ஒழுங்குமுறைப்படுத்தல்களும் மேற்பார்வையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமைக்கிடையிலும் அத்தகைய வியாபாரத் தீர்மானங்கள் அத்தகைய நிதிக் கம்பனிகள் முறிவடைவதற்கு வழிவகுக்கக்கூடும். உரிமம்பெற்ற நிதிக் கம்பனியொன்றின் உரிமத்தை இரத்துச்செய்வது பல்வேறுபட்ட மேற்பார்வை வழிமுறைகளின் இறுதி நடவடிக்கையொன்றாகவே இருக்குமென்பதுடன் அது அத்தகைய நிதிக் கம்பனி வியாபாரத்தினைத் தொடர்ந்தும் மேற்கொள்ளின் அது வைப்பாளர்களினதும் ஏனைய கடன் வழங்கியோரினதும் நலவுரித்துக்களுக்கு பங்கமாக இருக்கக்கூடுமென நிரூபிக்கப்படும் பொழுது மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உரிமத்தினை இரத்துச்செய்வது நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட பூர்வமான நடவடிக்கையொன்றாகும். நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, உரிமம்பெற்ற நிதிக் கம்பனி வைப்புக்களை அதன் வைப்பாளர்களுக்கு மீளச்செலுத்துவதற்குத் தேவையான நியாயமான வழிமுறைகள் அனைத்தையும் எடுப்பது அதன் கடப்பாடாகும்.

இலங்கை மத்திய வங்கி அதன் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இருக்கும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனியொன்று முறிவடையாது என்பதனை உறுதிப்படுத்தாது. எனினும், அத்தகைய முறிவினைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். வங்கித்தொழில் ஒழுங்குமுறைப்படுத்துநர் எவரும் அத்தகைய உத்தரவாதமொன்றினை ஒருபோதும் வழங்கமாட்டார் என்பதனை உறுதியாகக் குறிப்பிடமுடியும். கடந்தபல தசாப்தங்களாக பல பிரசித்திபெற்ற பன்னாட்டு வங்கித்தொழில் நிறுவனங்கள் முறிவடைந்துபோனமை இதற்குச் சான்றாகும். இப்பின்னணியில், இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுவரும் நிதியியல் கம்பனிகளின் வைப்புக்களை மீளளிப்பதற்கோ அத்துடன் அத்தகைய வைப்புக்களை இலங்கை மத்திய வங்கியின் நிதியிலிருந்து மீள்கொடுப்பனவு செய்வதற்கோ உத்தரவாதமளிக்கமாட்டாது.

2010இல் இலங்கை மத்திய வங்கி, இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டமொன்றினை நிறுவியது (திட்டம்). இது உரிமம் இரத்துச்செய்யப்பட்ட அல்லது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிதியியல் நிறுவனங்களினதும் ஒவ்வொரு வைப்பாளருக்கும் உயர்ந்தபட்சம் ரூ.600,000 இனை தற்பொழுது செலுத்தி வருகின்றது. 

அண்மையில் உரிமங்கள் இரத்துச்செய்யப்பட்ட சென்றல் இன்வெஸ்மன்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, த ஸ்டான்டட் கிரடிற் பினான்ஸ் லிமிடெட், த பினான்ஸ் பிஎல்சி மற்றும் ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் என்பனவற்றின் வைப்பாளர்களுக்கு வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000 இற்குட்பட்டு இத்திட்டத்திலிருந்து மீளச்செலுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, இலங்கை மத்திய வங்கியினதோ அல்லது இலங்கை அரசாங்கத்தினதோ நிதிகள் குறிப்பிட்ட நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்களது வைப்புக் காப்புறுதிக் கொடுப்பனவுகளுக்காக பயன்படுத்தப்படவில்லை. மேலும், குறிப்பிட்ட நிதிக் கம்பனிகளை ஒடுக்கிவிடும்பொழுது வைப்பாளர்கள் சொத்துக்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் பெறுகைகளினூடாக மேலும் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு உரித்துடையவராவர்.

பொதுமக்கள், அவர்களது பணத்தினை முதலீடு செய்யும்பொழுது தொடர்பான நிதிக் கம்பனியின் நிதியியல் ஆற்றல் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இலங்கை மத்திய வங்கி இத்தீர்மானங்களை எடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தகவல்களின் தரத்தினை தொடர்ந்தும் மேம்படுத்திவரும்.

அதிகாரமளிக்கப்படாத நிதியியல் நிறுவனமொன்றின் ஊழியர்களினால் நபரொருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் அண்மைய சம்பவம் தொடர்பில் மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இது நிதி குத்தகை வசதிகளை வழங்கும்பொழுது கூடியளவு கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதனை அர்த்தப்படுத்துகிறது.

நிதி குத்தகை வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க (திருத்தப்பட்டவாறான) நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்துகொள்வது கட்டாயமானதாகும். அத்தகைய பதிவினை மேற்கொள்ளாமல் நிதிக் குத்தகைக்குவிடும் தொழிலினை மேற்கொள்கின்ற எவரேனும் ஆள் நிதி குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் குற்றமொன்றுக்கு பொறுப்பாவார். நிதி குத்தகைக்குவிடும் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் பதிவுசெய்யப்பட்டிராத குறிப்பிட்ட நிறுவனம் நிதி குத்தகைக்குவிடும் வியாபாரத்தினை மேற்கொள்வதும் அதன் காரணமாக அத்தகைய நிறுவனம் மேற்கொள்ளும் ஏதேனும் நிதி வியாபாரமும் குற்றமிழைக்குமொன்றாக அமையும். தகவல்கள் கிடைத்ததும் அத்தகைய அதிகாரமளிக்கப்படாத நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் நிதி குத்தகை வசதிகளைப் பெறும்பொழுது நிதித்தொழில் சட்டத்தின் கீழ் தொடர்பான நிறுவனம் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றதா என்பதனையும் அதேவேளையில் அத்தகைய பதிவுகள் 1982ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க வாடிக்கையாளர் கொடுகடன் சட்டத்தின் கீழ் தவணைக் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதனையும் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நிதித்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் பதிவுசெய்யப்பட்ட, குத்தகை நிறுவனங்களிலிருந்து மட்டுமே நிதி குத்தகை வசதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது. பதிவுசெய்யப்பட்ட குத்தகை;குவிடும் நிறுவனங்களின் பட்டியலொன்று இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்தில் கிடைக்கத்தக்கதாகவிருக்கிறது. இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட 2020ஆம் ஆண்டின் இலக்கம் 4 மற்றும் 5 இனைக் கொண்ட சுற்றறிக்கைகளினூடாக அறிவிக்கப்பட்ட படுகடன் சட்ட இசைவுத்தாமதம் உட்பட, பதிவுசெய்யப்பட்ட குத்தகைக்குவிடும் நிறுவனங்கள் மட்டுமே இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைகளுக்கு உட்பட்டனவாகவிருக்கும். குறிப்பிட்ட சட்ட இசைவுத் தாமதம் நிதித்தொழில் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் ஏனைய சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் நிறுவனங்கள் என்பன தவிர்ந்த ஏனையவற்றிற்கு ஏற்புடைத்தாகாது என்பதனை வலியுறுத்திக்கூறல் வேண்டும். அத்தகைய குத்தகை வசதிகளை வழங்குகின்ற மற்றும் ஒழுக்கவியல்சாரா நடைமுறைகளைப் பின்பற்றுகின்ற அதிகாரமளிக்கப்படாத அத்தகைய நிறுவனங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கிக்கு தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஒழுங்குமுறைப்படுத்தப்படாத பணம் கடன் வழங்கல் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு சட்டக் கட்டமைப்பொன்றினை ஆக்கவேண்டியதன் அவசியத்தினை இலங்கை மத்திய வங்கி மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் பணம் கடன் வழங்கல் நிறுவனங்களுக்காக சிறந்ததும் மிகக் காத்திரமானதுமான ஒழுங்குமுறைப்படுத்தல் சூழலொன்று உருவாக்கப்படும். எனவே, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட உத்தேச நுண்பாக நிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைச் சட்டத்தினை ஆக்குவதற்கான அவசியம் தவிர்க்கமுடியாததாகும்.

Published Date: 

Friday, June 26, 2020