பாதுகாப்பான மற்றும் பத்திரமான இலத்திரனியல் கொடுப்பனவு நடைமுறைகளைப் பின்பற்றுதல்

வாடிக்கையாளரின் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகளிலிருந்தும் அதேபோன்று அட்டைக் கொடுப்பனவு வசதிகளிலிருந்தும் அதேநேர வங்கிகளுக்கிடையிலான நிதியியல் மாற்றல்கள் போன்ற இலத்திரனியல் கொடுப்பனவு (இ-கொடுப்பனவு) முறைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சௌகரியத்தினை வழங்குகின்றன. வாடிக்கையாளர் நிதியங்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு இலங்கையின் கொடுப்பனவு முறைமைகளும் உட்கட்டமைப்பும் பன்னாட்டு பாதுகாப்புத் தரநியமங்களுக்கு ஏற்றவிதத்தில் காணப்படுகின்றன. இவ்வசதிகளைத் தொடர்ச்சியாக அனுபவிக்கும் பொருட்டு இ-கொடுப்பனவுகளை மேற்கொள்ளுகின்றபோது போதியளவு பாதுகாப்பான வழிமுறைகளை வாடிக்கையாளர் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கமைய, தமது நடைமுறை அல்லது சேமிப்பு கணக்குகளை, கொடுப்பனவு அட்டைகளை அல்லது இலத்திரனியல் பணப்பைகளை (இ-பணப்பை) அணுகுவதற்கு மற்றும் பயன்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய எவையேனும் தகவல்களைப் பகிருகின்றபோது வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இரகசிய தகவல்கள் என்பது நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்கு இலக்கங்கள், அட்டை இலக்கம், சீவிவி (CVV) இலக்கம், முடிவடையும் திகதி போன்றன உள்ளடங்கலாக கடன் அல்லது பற்று அட்டை விபரங்கள், தேசிய அடையாள அட்டை இலக்கங்கள், இணையத்தள அல்லது செல்லிட தொலைபேசி வங்கித்தொழில் அல்லது இ-பணப்பைகள் கடவுச்சொற்கள், தனிப்பட்ட அடையாள இலக்கங்கள், ஒரு தடவை கடவுச்சொற்கள் (OTPs), கொடுக்கல்வாங்கல் சரிபார்த்தல் தொகைகள் போன்ற கொடுக்கல்வாங்கல் சரிபார்த்தல் தகவல்கள் மற்றும் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள், கொடுப்பனவு அட்டைகள், இ-பணப்பைகள் அல்லது ஏதேனும் வேறு இ-கொடுப்பனவு முறைகள் என்பவற்றுக்கு அணுகுவதற்கு, பயன்படுத்துவதற்கு அல்லது உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய ஏதேனும் வேறு தகவல்களை உள்ளடக்கும். அத்தகைய தகவல்கள் வாடிக்கையாளரின் அடையாளத்தினை சரிபார்ப்பதற்கு வழங்கப்படுவதுடன் இதனூடாக நிதியியல் கொடுக்கல்வாங்கல்களின் பாதுகாப்பினை அதிகரிப்பதுடன் வாடிக்கையாளரின் நிதியங்களைப் பத்திரப்படுத்துகின்றது. கடவுச்சொற்கள், தனிப்பட்ட அடையாள இலக்கங்கள், ஒரு தடவை கடவுச்சொற்கள், கொடுக்கல்வாங்கல் சரிபார்த்தல் தொகைகள் அல்லது வேறு கொடுக்கல்வாங்கல் சரிபார்த்தல் தகவல்கள் வேறு எவரேனும் தரப்பினருடன் பகிர்ந்துகொள்ளப்படக்கூடாது  என்பதுடன் அதன் குறித்துரைக்கப்பட்ட நோக்கத்திற்காக மாத்திரம் அவை பயன்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறுகின்றமையானது அத்தகைய தகவல்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கும் நிதியங்களுக்கும் மோசடிக்காரர்களுக்கு அணுகுவழியினை வழங்கக்கூடியது என்பதனால் வாடிக்கையாளரின் சொந்த நிதியங்களின் பாதுகாப்பினைக் குறைக்கும். 

இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற நிதியியல் நிறுவனங்களுடனும் வேறு ஆர்வலர்களுடனும் ஒன்றிணைந்து மோசடியான இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல்களை தடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கு பல வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கமைய, அனைத்து இ-கொடுப்பனவுகளுக்கும் குறுந்தகவல் சேவை விழிப்பூட்டல்களை அல்லது ஏதேனும் வேறு அதேநேர அறிவித்தல் வசதிகளை வழங்குவதற்கும் அதேபோன்று ஈஎம்வி (EMV) சிப் அடிப்படையில் அமைந்த கொடுப்பனவு அட்டைகளை வழங்குவதற்கும் உரிமம்பெற்ற நிதியியல் நிறுவனங்கள் வேண்டப்பட்டுள்ளன. ஈஎம்வி (EMV) சிப் அடிப்படையில் அமைந்த அட்டைகள், தொடர்புபட்ட மோசடியான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு வடிவமைக்கப்பட்ட அதிகரித்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவையாகும். 

அதிகாரமளிக்கப்படாத இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல்களைத் தடுக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியானது தொடர்புடைய உரிமம்பெற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து தாமதிக்காது அதேநேர இ-கொடுப்பனவு அறிவித்தல் வசதிகளுக்காக பதிவு செய்யுமாறும் ஈஎம்வி (EMV) சிப் அடிப்படையிலமைந்த கொடுப்பனவு அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் இ-கொடுப்பனவுகளை மேற்கொள்ளுவதற்குப் பயன்படுத்தக்கூடிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுகின்றபோது எச்சரிக்கையாக இருக்குமாறும் வாடிக்கையாளர்களுக்கு இத்தால் அறிவிக்கின்றது. 

 

 

Published Date: 

Thursday, August 1, 2019