த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் - இரண்டாம் கட்டம்

இலங்கை மத்திய வங்கி, 2020.07.02ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்தினை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கமைய அத்தகைய கொடுப்பனவுகள் நாடுமுழுவதிலுமுள்ள மக்கள் வங்கியின் 63 கிளைகளில் இடம்பெறும். இந்நட்டஈட்டு பொறிமுறையின் நியதிகளுக்கிணங்க, ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் ரூ.600,000 என்ற அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படும். 

இவ்விரண்டாம் கட்ட நட்டஈட்டின் கீழ், த பினான்ஸ் கம்பனி பிஎல்சியினால் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து வைப்பாளர்களுக்குமான நட்டஈடு 2020.07.02 இலிருந்து ஆரம்பிக்கப்படும்.  

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் நிதி வியாபார உரிமம் இரத்துச்செய்யப்பட்டதனைத் தொடர்ந்து த பினான்ஸ் கம்பனியின் வைப்பாளர்களுக்கான/ வைப்பாளர்களின் சட்டரீதியான நன்மைபெறுநர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் மூலம் 2020.06.07 இலிருந்து ஆரம்பிக்கப்பட்டன. இதற்கமைய, கொடுப்பனவுப் பொறிமுறையின் முதலாவது கட்டத்தின் கீழ் ஒரு கணக்கினை மட்டும் பேணிய தனிப்பட்ட வைப்பாளர்களுக்கு அதாவது மொத்தமாக ஏறத்தாழ 105,000 வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பொறிமுறையின் இரண்டாவது கட்டத்தின் கீழ், ஏறத்தாழ மற்றொரு 38,000 வைப்பாளர்கள் நட்டஈட்டுக் கொடுப்பனவினைப் பெறுவதற்கு உரித்துடையவராகவிருப்பர்.

நட்டஈட்டு நடைமுறைகள் வினைத்திறனுடனும் காத்திரமான விதத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டிருக்கிறது. நட்டஈட்டு நிகழ்ச்சித் திட்டத்தினை விரைவாக நிறைவேற்றும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் முகவராக மக்கள் வங்கி நியமிக்கப்பட்டிருக்கிறது.

த பினான்ஸ் கம்பனியின் வைப்பாளர்கள், அவர்களது மூல வைப்புச் சான்றிதழ்கள், அடையாளப்படுத்தும் விபரங்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்நட்டஈட்டுக் கொடுப்பனவு நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்கொள்வதற்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கூட்டுக் கணக்குகள், பராயமடையாதோர் கணக்குகள், கம்பனிகள் மற்றும் சங்கங்களின் பெயர்களில் பேணப்படும் பங்குகள் மற்றும் வைப்புக்களுக்கு மாற்றப்பட்ட வைப்புக்கள், மரணமடைந்த வைப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டில் வதியும் வைப்பாளர்கள், மூல வைப்புச் சான்றிதழ்கள்/ சேமிப்புப் புத்தகங்கள் தொலைந்துபோனமை, தேவையான அடையாள ஆவணங்கள் இல்லாமை போன்ற சந்தர்ப்பங்கள் தொடர்பில் சத்தியக் கடதாசிகள், மக்கள் வங்கியினால் குறித்துரைக்கப்பட்டவாறு த பினான்ஸ் கம்பனியிலிருந்து பெறப்பட்ட விசேட படிவங்கள் மற்றும் உறுதிப்படுத்தல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. த பினான்ஸ் கம்பனியின் வைப்பாளர்கள் அத்தகைய அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் நட்டஈட்டு நிகழ்ச்சித்திட்டத்தினை வெற்றிபெறச் செய்யுமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

த பினான்ஸ் கம்பனியின் வைப்பாளர்களுக்கான நட்டஈடு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். 

மக்கள் வங்கி: 0112-481594, 0112-481320, 0112-481612, 0112-481703

இலங்கை மத்திய வங்கி : 0112 398 788, 0112 477 261

 

Published Date: 

Friday, June 26, 2020