கொடுப்பனவு அட்டை கொடுக்கல்வாங்கல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்

தன்னியக்கக்கூற்றுப் பொறி வலையமைப்பினூடாக பணத்தினை எடுப்பனவு செய்தல் மற்றும் உலகளாவிய வணிகர்களுக்கிடையில் பரிமாற்றல்களைச் செய்தல் போன்ற வசதிகளை கொடுப்பனவு அட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து நிதியினை களவாடல் செய்யும்பொருட்டு தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டைகளை வாசிக்கும் பொறிகள் என்பன குற்றங்கள் இழைப்போரினால் தவறாக உபயோகிக்கக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைத்துக்கொள்வதற்காக இலத்திரனியல் சிப்பினை (ஈஎம்வி) உள்ளடக்கியதும் இலத்திரனியல் பரிமாற்றல்களுக்கான குறுஞ்செய்தித் தகவல் வழங்குவதுமான அதிக பாதுகாப்புடைய கொடுப்பனவு அட்டைகளை வழங்குதல் போன்ற பன்னாட்டுக் கொடுப்பனவு அட்டை பாதுகாப்பு நியமங்கள் மற்றும் மிகச்சிறந்த நடைமுறைகளை இலங்கையின் தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டை வலையமைப்பு உள்ளடக்கியுள்ளது.

மோசடியான கொடுப்பனவு அட்டைகளை உபயோகித்து பணத்தினை எடுப்பனவு செய்யும் சில சந்தர்ப்பங்கள் பற்றி அண்மைக்காலத்தில் அறியக்கிடைத்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைத்துக் கொள்வதற்கும் வங்கி முறைமையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வேளையில் வாடிக்கையாளர் நிதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் இலங்கை மத்திய வங்கி, லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகள் என்பன ஏற்கனவே காணப்படுகின்ற பாதுகாப்பு அளவிடைகளுக்கு மேலதிகமாக இன்னும் ஏனைய அளவிடைகளை ஆரம்பித்துள்ளது.

எந்தவகையிலுமான கொடுப்பனவு முறைமையினைப் பாதுகாப்பதற்கு வங்கிகள், கொடுப்பனவு அட்டை வழங்குநர்கள், பெற்றுக்கொள்பவர்கள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் போன்றவர்களின் செயலாற்றங்கள் வாடிக்கையாளர்களினால் அடையாளங்காணப்பட வேண்டியதாகவும் ஆதரவு அளிக்கப்படவேண்டியதாகவும் உணரப்படுகிறது. தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் பரிமாற்றல்களின் பாதுகாப்பினை வலுப்படுத்தும் முகமாக வாடிக்கையாளர் ஈஎம்வி செயற்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். ஈஎம்வி  செயற்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகள் முற்பக்கத்தில் நன்கு புலப்படக்கூடிய இலத்திரனியல் சிப் ஒன்றினைக் கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும். வாடிக்கையாளரினால் பயன்படுத்தப்படுகின்ற கொடுப்பனவு அட்டையானது ஈஎம்வி செயற்படுத்தப்படாதது எனும் பட்சத்தில், வாடிக்கையாளர் குறிப்பிட்ட வங்கிகளிடம் ஈஎம்வி செயற்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டையினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கமுடியும்.

அதன்படி, தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் பரிமாற்றல்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக கொடுப்பனவு அட்டைகள் மற்றும் தன்னியக்ககூற்றுப் பொறிகளை உபயோகிக்கும்போது மிகுந்த அவதானத்தினையும் விழிப்புணர்வினையும் கொண்டிருக்கின்ற வேண்டுமென வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்துகின்றது. அடையாளங்காணப்படாத அல்லது அதிகாரமளிக்கப்படாத பரிமாற்றல்கள் மற்றும் காணாமல்போன அல்லது தவறவிடப்பட்ட கொடுப்பனவு அட்டைகள் போன்ற ஏதாவது சந்தர்ப்பங்கள் உடனடியாக குறிப்பிட்ட வங்கிக்கு அறிவிக்கப்படவேண்டும்.

Published Date: 

Wednesday, February 6, 2019