ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டுக்கு அனுப்புதல் மற்றும் இலங்கை ரூபாவிற்கு மாற்றுதல்: இவ்வழிமுறைகள் ஏன் அவசியமானவை?

 2021 பெப்புருவரி 18 அன்று, நாணயச் சபையானது ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் அனுப்புதல் அத்துடன் அத்தகைய பெறுகைகளை இலங்கை ரூபாவிற்கு மாற்றுதல் தொடர்பில் விதிகளை வழங்கியதுடன் இது தொடர்பில் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களையும் வழங்கியது.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள நாட்டிற்க்கு அனுப்புதல் தேவைப்பாட்டிற்கு மேலதிகமான மேற்குறித்த விதிகளும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களும் நாட்டில் வெளிநாட்டுச் செலாவணி நிலைமையினை வலுப்படுத்துவதற்கும் செலாவணி வீதத்தில் சில மிதமிஞ்சிய தளம்பல்களை ஏற்படுத்திய ஊகச் செயற்பாட்டினை தணிக்கும் பொருட்டும் விடுக்கப்பட்டன.

இவ்விதிகளும் தொழிற்படுத்தல் அறிவித்தல்களும் விடுக்கப்பட்டதிலிருந்து அத்தகைய விதிகள், இலங்கை ஏற்றுமதியாளர்களின் உள்நாட்டு வியாபாரங்களை விரிவுபடுத்துவதிலிருந்து அவர்களை ஊக்கமிழக்கச் செய்யுமென விவாதிக்கின்ற சில ஊடக அறிக்கைகள் வெளிவந்தன. ஏற்றுமதியாளர்களின் சட்டபூர்வமான வருவாய்கள் வங்கித்தொழில் முறைமையினாலும் அரசாங்கத்தினாலும் அபகரிக்கப்பட்டு வருகின்றன எனவும் இவ்வறிக்கைகள் சுட்டிக்காட்டின.

இலங்கை ஏற்றுமதியாளர்களில் பலர் தமது வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் பாரிய பங்கொன்றினை ஏற்கனவே இலங்கைக்கு அனுப்புகின்றனர் என்பதனை தெளிவுபடுத்துவதற்கு மத்திய வங்கி விரும்புகின்றது. இவ் ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே தமது உள்நாட்டு கொடுப்பனவுக் கடப்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு அவர்களது வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் கணிசமான பங்கினை இலங்கை ரூபாவிற்கு மாற்றுகின்றனர். ஆகையால், வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களை இலங்கைக்குத் அனுப்புவதற்கும் அவ்வருவாய்களின் 25 சதவீதத்தினை இலங்கை ரூபாய்களுக்கு மாற்றுவதற்குமான தேவைப்படுத்தல் ஏற்றுமதியாளர்கள் மீது மிகையான அழுத்தத்தினை ஏற்படுத்தாது. மேலும், ஏற்றுமதித் துறைகளில் காணப்படுகின்ற உள்நாட்டு பெறுமதி சேர்த்தல் என்பது ஒன்றிலிருந்து மற்றொரு தொழிற்துறைக்கு வேறுபடுவதுடன் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் 25 சதவீதத்தினை இலங்கை ரூபாய்களுக்கு மாற்றுவதற்கான தேவைப்படுத்தலானது குறைந்தது பெறுமதி சேர்த்தலின் இம் மட்டத்தினை இதுவரையில் சென்றடையாத ஏதேனும் ஏற்றுமதி வியாபாரத்தில் உள்நாட்டு பெறுமதி சேர்த்தலினை ஊக்குவிக்கும். அத்தகைய நாட்டிற்குத் அனுப்புதல் மற்றும் மாற்றுதல் தேவைப்படுத்தல்கள் வலிமைமிக்க ஏற்றுமதிச் செயலாற்றுகையினைக் காண்பித்துள்ள ஏனைய பிராந்தியப் பொருளாதாரங்களிலும் கூட வழமைக்குமாறானவையல்ல. உண்மையில் இந்நாடுகளில் இத்தேவைப்படுத்தல்கள் பல நோக்குகளில் மிகவும் கண்டிப்பானவையாகக் காணப்படுகின்றன.

ஏற்றுமதிப் பெறுகைகளின் 25 சதவீதத்தினை மாற்றம் செய்த பின்னரும்கூட, ஏற்றுமதியாளர்கள் இலங்கை ரூபாய்களில் மாற்றப்பட்ட தொகையினை தொடர்ந்தும் உடமையில் வைத்திருக்கின்ற அதேவேளை வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் எஞ்சியுள்ள 75 சதவீதத்தினை தமது சொந்த விருப்பில் வெளிநாட்டு நாணயத்தில் சேமிப்பதற்கோ அல்லது மேலதிக மாற்றுதல்களுக்கோ இறக்குமதி செய்யப்படும் உள்ளீடுகளைக் கொள்வனவு செய்வதற்கோ பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதனையும் மத்திய வங்கி வலியுறுத்துகின்றது.

ஏற்றுமதியாளர்கள் மூலம் இலங்கை ரூபாய்களுக்கு மாற்றப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகளின் 50 சதவீதத்தினை (மொத்த வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் 12.5 சதவீதம்) மத்திய வங்கிக்கு விற்பனை செய்வதற்கான உரிமம்பெற்ற வங்கிகளுக்கான தேவைப்படுத்தலானது நாடு கடன்பெறுகை இன்றி அதன் ஒதுக்குகளை படிப்படியாக உயர்வான மட்டத்திற்கு கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கின்றது என்பதனை உறுதிசெய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி உழைக்கின்ற துறைகளை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற முனைப்பான முயற்சிகள் மற்றும் இறை அத்துடன் நாணயக் கொள்கை ஆதரவு என்பவற்றுடன் சேர்த்து மத்திய வங்கி அவ்வாறு வெளிநாட்டுச் செலாவணியினை உள்ளீர்க்கின்றமை வெளிநாட்டு கடன்பெறுகைகளுக்கு பதிலாக அதற்குரிய மூலவளங்களை நம்பியிருப்பதற்கு நாட்டிற்கு உதவியளிக்கின்ற அதேவேளை, இலங்கையின் கொடுகடன் தோற்றப்பாட்டினை வலிமைப்படுத்தி செலாவணி வீத உறுதிப்பாட்டினை அதிகரித்து பொருளாதாரத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்தும்.

Published Date: 

Tuesday, February 23, 2021