இலங்கை அரசாங்கம் ஐ.அ.டொலர் 1 பில்லியன் வெளிநாட்டு நாணய தவணை நிதியிடல் வசதியைப் பெற்றுக்கொண்டிருக்கிறது

இலங்கை அரசாங்கம், 2018 மாச்சில் ஐக்கிய அமெரிக்க டொலர் அல்லது யப்பானிய யென் அல்லது யூரோ நாணய இன வகையில் குறித்துரைக்கப்பட்ட அல்லது அவை இணைந்த ஐ.அ.டொலர் 1,000 மில்லியன் வரையிலான வெளிநாட்டு நாணய தவணை நிதியிடல் வசதியொன்றிற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகள் மற்றும் முதலீட்டு இல்லங்களுக்கு அழைப்பு விடுத்தது. 

இதற்கமைய, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகளிலிருந்தும் முதலீட்டு இல்லங்களிலிருந்தும் நான்கு முன்மொழிவுகள் கிடைத்தன. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழு மற்றும் தொழில்நுட்ப மதிபீட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மதிப்பீடு மற்றும் பேச்சுவார்த்தைச் செயன்முறைகளினூடாக, சீன அபிவிருத்தி வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளில் தரப்பட்டுள்ள குறைந்த செலவு, நீண்ட முதிர்ச்சிக் காலம் என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு அவ்வங்கி வாய்ப்புக்களைக் கொண்ட கூட்டு ஆலோசனை ஒழுங்குபடுத்துநராகத் தெரிவு செய்யப்பட்டது. 

இதன் விளைவாக இலங்கை அரசாங்கம் எட்டாண்டுகள் முதிர்ச்சிக் காலத்துடன் வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதியின் கீழ் சீன அபிவிருத்தி வங்கியிலிருந்து ஐ.அ.டொலர் 1,000 மில்லியனைப் பெற்றுக் கொண்டது. வட்டிச் செலவானது உயர்ந்தளவு போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் 6 மாத ஐ.அ.டொலர் இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்துடன் இணைக்கப்பட்டதாகவும் விளங்குவதுடன் மூன்றாண்டுகள் சலுகைக் காலத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகிறது. மீள்கொடுப்பனவுகள் சலுகைக் காலத்தின் பின்னர் சமமான அரையாண்டுக் கொடுப்பனவுகளாக இருக்கும். இதன் பெறுபேறாக ஏற்படும் உட்பாய்ச்சலானது அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 1,000 மில்லியனால் அதிகரிப்பதற்குப் பங்களிக்கும்.

Published Date: 

Wednesday, October 17, 2018