இலங்கை மத்திய வங்கியானது சௌபாக்யா கொவிட் - 19 புத்துயிரளித்தல் வசதியினூடாக ரூ.178 பில்லியன் தொகையான 61,907 கடன்களுக்கு ஒப்புதலளித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியானது 2020 ஒத்தோபர் 15ஆம் திகதி வரையில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளித்தது. இந்த விண்ணப்பங்கள் மொத்தமாக ரூ.177,954 மில்லியனை வகைகூறுவதுடன் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரையில், உரிமம்பெற்ற வங்கிகள் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட 45,582 வியாபாரங்களுக்கிடையில் ரூ.133,192 மில்லியன் கடன்களை விடுவித்துள்ளது. (தகவல்களுக்கு அட்டவணை 01 இனைப் பார்க்கவும்)

கடன் திட்டத்தின் முதற்கட்டம் 2020 ஏப்பிறல் 01 இலிருந்து அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடன் திட்டத்தின் கட்டம் II மற்றும் கட்டம் III ஆகிய இரண்டும் 2020 யூலை 01இல் இருந்து அமுலுக்குவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த திட்டங்களின் நோக்கமானது ஆண்டிற்கு 4 சதவீத வட்டிவீதத்தில் மொத்தமாக ரூ.150 பில்லியனை தொழிற்படு மூலதனக் கடன்களாக வழங்குவதாகும். இந்த கடன்கள் 6 மாத சலுகைக்காலம் உள்ளடங்கலாக 24 மாதங்கள் மீளச்செலுத்தும் காலத்தினை வழங்குகின்றது. கொவிட்-19 வெளித்தாக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் தனிநபர்கள் உள்ளடங்கலான வியாபாரங்கள் இதன் பயன்பெறுநர்களாகக் காணப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட ரூ.150 பில்லியன் வரையறையினைக் கருத்திற்கொள்ளாது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்தது.  அறிவிக்கப்பட்ட முடிவுத்திகதி வரையில் கிடைக்கப்பெற்ற பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் அனைத்து விண்ணப்பங்களும் இந்தக்கடன் திட்டத்தினூடாக சேவையாற்றப்படுகின்றது. 

 

முழுவடிவம்

Published Date: 

Friday, October 16, 2020