திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து
மூத்த துணை ஆளுநர்
திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து, வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல், வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவம், நாணய முகாமைத்துவம் மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமைகள் ஆகிய விடயப்பரப்புக்களில் மத்திய வங்கியில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பணிக் காலத்தினைக் கொண்டவராவார். இக்காலப்பகுதியில் திருமதி பர்னாந்து வங்கி மேற்பார்வைப் பணிப்பாளராகவும் செலாவணிக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியுள்ளதுடன் சர்வதேச நியமங்களுடனும் சிறந்த நடத்தைகளுடனும் இணங்கிச் செல்லும் விதத்தில் உறுதியான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தனது தலைமைத்துவத்தை வழங்கியதன் மூலம் நிதியியல் உறுதிப்பாட்டைப் பேணுவதற்கு மிக முக்கியமான பங்கினை வழங்கியுள்ளார்.
மேலும், திருமதி பர்னாந்து, இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு, ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்களுக்கிடையிலான சபை மற்றும் தேசிய கொடுப்பனவுச் சபை என்பவற்றின் பதவிவழி உறுப்பினராக அத்தகைய குழுக்களின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை அடைவதில் அளப்பரிய பங்காற்றியுள்ளார். திருமதி பர்னாந்து, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை, கோல்டன் கீ கிரடிற் கார்ட் கம்பனி லிமிடெட், ஜிகே கொஸ்பிட்டல்ஸ் லிமிடெட், ஜெற்விங் சிம்பொனி லிமிடெட் போன்றவற்றில் பணிப்பாளர் ஒருவராகவும் மற்றும் இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கூட்டாண்மை ஆளுகை நியமங்களை மதிப்பாய்வு செய்யும் குழு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் பேச்சுவார்த்தை தொடர்பான முதலீட்டு துணைக்குழு, தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் பயிற்சி தொடர்பான ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினரொருவராகவும் இலங்கை மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
திருமதி பா்னாந்து தற்போது, வங்கி மேற்பாா்வை, வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பாா்வை, கொடுப்பனவுகள் மற்றும் தீா்ப்பனவுகள், நாணயம்,வெளிநாட்டுச் செலாவணி, நிதி, பிரதேச அபிவிருத்தி மற்றும் ஊழியா் சேமலாப நிதியம் ஆகிய திணைக்களங்களை மேற்பாா்வை செய்வதுடன் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு, இலங்கையில் நிலைபெறத்தக்க நிதிக்கான வழிகாட்டலை நடைமுறைப்படுத்துவதன் மீதான வழிநடாத்தற் குழு மற்றும் தேசிய கொடுப்பனவுகள் சபை ஆகிய குழுக்களின் தலைவராகவும் பணியாற்றுகின்றாா். திருமதி பா்னாந்து இலங்கை வங்கியாளர் நிறுவகத்தினதும் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தினதும் தலைவராகவும், இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவா்த்தனை ஆணைக்குழு அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் எமக்காக நாம் நிதியத்தின் முகாமைத்துவச் சபை ஆகியவற்றின் உறுப்பினா் ஒருவராகவும் தொழிற்படுகின்றாா்.
இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து நிதியியல் பொருளியலில் முதுமானிப் பட்டப்படிப்பையும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து வர்த்தக இளமானிப் பட்டப்படிப்பையும் நிறைவுசெய்துள்ளாா்.